வஞ்சிப்பா
வஞ்சிப்பாவின் இலக்கணம்:-
1. தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி என்று கனிச்சீர் கொண்டு வரும்.
2. இது வஞ்சிப்பாவுக்கே உரிய சீர் ஆதலால் வஞ்சியுரிச்சீர் ஆகும்.
3. இவற்றோடு பிறசீர்களும் விரவி வரும்.
4. இப்பாடலுக்கு உரிய தளை வஞ்சித்தளை. இது இருவகைப்படும்.
அ) ஒன்றிய வஞ்சித்தளை - அதாவது கனிமுன் நிரையசை வருவது.
ஆ) ஒன்றாத வஞ்சித்தளை - அதாவது கனிமுன் நேரசை வருவது.
5. பிற பாடல்களுக்குரிய தளைகளும் பெற்று வரும்.
6. வஞ்சிப்பா தூங்கலோசை பெற்று அமையும்.
7. அடி வரையறை மூன்றடியாகும். இரண்டடியாகவும் வரலாம். இதற்கு மேல் எத்தனை
வேண்டுமானாலும் வரும்.
தூங்கலோசை:-
1. ஏந்திசைத் தூங்கலோசை
2. அகவல் தூங்கலோசை
3. பிரிந்திசைத் தூங்கலோசை
என மூன்று வகைப்படும்.
1. ஏந்திசைத் தூங்கலோசை
ஒன்றிய வஞ்சித்தளைகள் வருவது ஏந்திசைத் தூங்கலோசை ஆகும்.
எ.டு:-
உழவுத்தொழில் நனியாற்றிடும்
கழனித்துறை வளங்கள்பெறக்
கருத்தாய்வயற் களத்தேசெல
வெறுக்காநிதிப் பெருக்காகுமே.
2. அகவல் தூங்கலோசை
இது ஒன்றாத வஞ்சித்தளை வருவது. அதாவது கனிச்சீரையடுத்து நேரசை வரும்.
ஆனால் அனைத்தும் கனிச்சீர்களாகவே இருக்கும்.
எ.டு:-
கூவும்குயில் நன்றாகவும்
தாவும்மரை சார்ந்தோடவும்
மேவும்மயில் மெல்லேவர
யாவுமனை வாழ்வித்ததே.
3. பிரிந்திசைத் தூங்கலோசை
இதில் ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை இவற்றையல்லாது பிற தளைகளும்
வரும்.
எ.டு:-
ஏதமிலா எழிலசைய
மாதுமொரு முறத்தால்தனை
மோதுமொரு வேங்கையினை
மோதித்துரத் தினள் அன்றே.
இது வரை பாக்களைப் பற்றியும் அவற்றின் வகைகளைப் பற்றியும் பார்த்தோம். பாக்களில் தாழிசை, துறை, விருத்தம் போன்ற உட்பிரிவுகளும் உண்டு. பிறிதொரு சமயம் வாய்க்கும்போது அவற்றைப் பற்றி விரிவாக அலசலாம். மரபுக்கவிதை எழுத விரும்பும் ஆரம்ப கவிஞர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
மேற்கொண்டு தங்களை வளர்த்துக்கொள்ள பழந்தமிழ் பாடல்களும், சுய பயிற்சியும் மிக உதவியாக இருக்கும். ஒவ்வொருவரும் முயற்சி செய்து பாக்களை எழுதவேண்டும் என்பதே என் அவா. மரபுக்கவிதை எழுதுவது ஒன்றும் கடினமான செயலல்ல என்பதினை இந்த பதிவு உணர்த்தியிருக்கும். எளிய வார்த்தைகளைக் கொண்டே மரபுக்கவிதை அமைக்கலாம்.
இலக்கணத்திற்காக பாடல் எழுதுவதை விட பாடலின் தன்மைக்கேற்ப இலக்கணம் பொருந்துவதே
சாலச் சிறந்தது.
Sunday, July 24, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Hi... if you don't mind would you be intersted in joining few of us in learning venpaa.
http://www.unarvukal.com/forum/index.php?showtopic=244&st=0
maybe you could bring out the contents you post in your blog there as well and give link to your blog.
Your poems are very good :D
Post a Comment