Sunday, July 24, 2005

மரபுக்கவிதை எழுதுவது எப்படி?

மரபுக்கவிதை எழுதுவது எப்படி?

மன்றத்தினருக்கு வணக்கம். மரபுக்கவிதை எழுதுவது எப்படி என்பதை வ.த. இராமசுப்ரமணியம் அவர்கள் எழுதிய நூலிலிருந்து இங்கே தரலாம் என்று உள்ளேன். கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பர். என்னைப்போல் மரபுக்கவிதை எழுத விரும்புபவர்களுக்கு உதவும் எண்ணத்திலேயே இதை ஆரம்பிக்கிறேன்.

"யாப்பருங்கலக்காரிகை கற்றுக் கவிபாடுங்கால்
பேரிகை கொட்டி பிழைப்பது மேலாம்."


என்பர். எனினும் அலை ஓய்வது எப்போது? நாம் முழுகுவது எப்போது?

கவிதை எழுதுவதற்கு இலக்கிய அறிவும், இலக்கணத்தேர்ச்சியும் வேண்டும் என்பர். நல்ல தரமான கவிதைகளைப்படைக்க இத்தகைய இலக்கண இலக்கியங்களில் புலமை கொண்டிருக்கவேண்டும் என்பது கருத்தேயன்றி கவிதை எழுதுவதற்கான தடைகள் அல்ல.

கவிதை எழுத மிக முக்கியமானது உணர்ச்சி. ஒரு கவிஞன் எதனை இலக்காகக் கொள்கின்றானோ
அதுவே இலக்கிய அறிவாக அவனுக்கு அமைகிறது. வாழ்க்கையில் உண்டாகும் அனுபவமே அவனுக்கு இலக்கிய அறிவைப்புகட்டுகின்றது. கவிஞன் என்பவன் எதனையும் கூர்ந்து நோக்கும் இயல்புடையவன். அவன் எதனை எந்த நோக்கத்தில் பார்க்கின்றானோ அதுவே அவனுக்கு அதனைப்பற்றிய அறிவை ஈட்டித்தருகிறது. எனவே உணர்ச்சிகளை இதமாகக்கொட்ட வேண்டும். பிறர் மனத்தில் பதியுமாறு நயமிகு நற்றமிழில் கொடுக்கவேண்டும். அதற்கு மொழி அறிவு நிச்சயம் தேவை. இலக்கியங்களைச் சுவைத்து நமது இலக்கிய அறிவைப்பெருக்கிக்கொள்ளலாம். உணர்வுகளை முழுமையாக அனுபவித்து தன்னிச்சையாக எழுதப்படும் கவிதைகள் இலக்கணங்கள் பார்ப்பதில்லை.

முற்காலத்தில் பாடல்கள் யாவும் இறையருளால் பாடப்பெற்றவை என்றும் திருஞான சம்பந்தர்,
சுந்தரமூர்த்தி சுவாமிகள், அருணகிரி நாதர், இராமலிங்க அடிகளார், காளமேகப்புலவர் முதலானோர் அவ்வாறு பாடிய அருளாளர்கள் என்றும் கூறுவர்.

கவிகள் ஆசுகவி, வித்தார கவி, மதுரகவி, சித்திரகவி என நான்கு வகை உள்ளன. எனினும்
பெரும்பான்மையான கவிதைகள் தனித்து ஒரு கவிஞனின் சிந்தனையிலிருந்து பேனா முனயின் வழியாக வெளிவந்து மலர்கிறது.

கவிதை எழுதுவதற்கு நிறையச் சொற்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றின் வீரியத்தையும் உணர்ந்திருக்க வேண்டும். அது மக்களுக்கு எளிதில் விளங்கக்கூடியவையாகவும் இருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் இனி இலக்கண மரபுகள் என்பவற்றின் அடித்தளத்தைச் சிறிது நோக்குவோம்.

யாப்பிலக்கணத்தின் படி எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலியவற்றையும்
பாக்கள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா - இவைகளின் இலக்கணங்களையும் பற்றி
இனிவரும் தொடரில் எளிமையாக விளக்கக் காண்போம்.

No comments: