Sunday, July 24, 2005

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 14

6.4. மென் தொடர்க் குற்றியலுகரம்:-

இதில் மெல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: சங்கு, பஞ்சு, நண்டு, பந்து, கம்பு, கன்று.

சங்கு + ஊதினான் = சங்கூதினான்

இங்கே 'ங்' என்கிற மெல்லின எழுத்தை அடுத்து 'கு' என்ற உகரம் வந்ததாலும் வரும்மொழியுடன்
இணைந்து நிலைமொழி 'உ'கரம் திரிந்து வரும்மொழி 'ஊ' உடன் இணைந்து சங்கூதினான் என்று
ஆனதாலும் மென் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.


6.5. இடைத் தொடர்க் குற்றியலுகரம்:-

இதில் இடையின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: பெய்து, கொய்து, மல்கு, புல்கு, எள்கு, மாழ்கு

பெய்து + உடுத்தான் = பெய்துடுத்தான்.

இங்கே நிலைமொழியில் 'ய்' என்ற இடையின எழுத்தை அடுத்து 'து' என்ற உகரம் வந்ததாலும்
அது வரும்மொழி 'உ' உடன் இணைந்து நிலைமொழி உகரம்கெட்டு பெய்துடுத்தான் என்று
குறுகியதாலும் இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆயிற்று.

6.6. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

இ·'து' - ஆய்த எழுத்தை அடுத்து உகரம் ஆகும்.

அ·து, இ·து, எ·து, க·சு, எ·கு போன்ற சொற்கள் வரும். இவற்றோடு வருமொழி முதலில்
உயிரெழுத்து வரும்போது குற்றியலுகரம் உண்டாகும்.

அ·து + இல்லை = அ·தில்லை

இங்கே நிலைமொழியில் '·' என்ற ஆய்த எழுத்தை அடுத்து 'து' வந்ததாலும்
வருமொழி 'இ' உடன் இணைந்ததால் உகரம் போய் அ·தில்லை என்று ஆனதாலும்
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.

மீள் பார்வை:-

இப்பாகத்தில் குற்றியலுகரமானது நிலை மொழி ஈற்றில் கு,சு, டு, து, பு, று என்ற உகர எழுத்துக்கள் வந்து அவை நிலைமொழியின் முதல் எழுத்தில் உள்ள உயிருடன் இணைவதால் 'உ' கரம் ஓடி தனது இயல்பான ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிப்பது குற்றியலுகரம் என்றும் அவற்றில் நெடில் தொடர்க் குற்றியலுகரம், வன், மென், இடைத்தொடர்க் குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் ஆகியன வரும் என்றும் பார்த்தோம்.

குறிப்பு:-

நெடில் தொடர்க்குற்றியலுகரம் போல குறில் தொடர்க்குற்றியலுகரம் ஏன் வரக்கூடாது என்ற ஐயம்
ஏற்படக்கூடும். கீழே உள்ள எடுத்துக்காட்டுகளை கவனிக்கவும்.

மிகு, பசு, மடு, மது, தபு, மறு - இவையெல்லாம் குறிலை அடுத்து உகரம் வரும் சொற்களுக்கு உதாரணங்கள். ஆனால் இவை குற்றியலுகரமாகாது.

ஆனால் உயிர்த்தொடர்க்குற்றியலுகரத்தில் விறகு, மரபு போன்ற சொற்களுடன் ற, ர அடுத்து முறையே 'கு', 'பு' வந்த போதும் அவற்றை குறில் தொடர்க்குற்றியலுகரமாகக் கருதுவதில்லை. உயிர்த் தொடர்க் குற்றியலுகரமாகவே கருதுகிறோம்.

குற்றியலிகரம்

உகரம் திரிந்து இகர முறும்
யாகாரம் சேர்ந்து வந்து
(வெண்பாவில் எழுதியது)

உகர எழுத்துக்களின் முன்னே வருமொழியின் முதலில் 'யா' எழுத்தானது வந்தால்
நிலைமொழியின் உகரம் திரிந்து இகரமாகும். இதுவும் குற்றியலுகரத்தைப் போன்று
தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும்.

எ.டு:-

நாடு + யாது = நாடியாது

இங்கே நிலை மொழியின் ஈற்றில் 'டு' விலுள்ள 'ட்+உ' உகரமானது வருமொழி 'யா' உடன் இணைந்ததால் 'ட்+இ' என்று திரிந்து "நாடியாது" ஆனது. எனவே தனது மாத்திரையிலிருந்து குறைந்து ஒலித்து குற்றியலிகரம் எனப்பட்டது.

எ.டு:-


வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல். [

இங்கே உள்ள வெண்பா பாடலை நோக்குக.

மா முன் நிரையும், விளம் முன் நேரும், காய் முன் நேரும்
ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய்
கடைசிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என முடிதல்
வெண்பாவின் இலக்கணம் ஆகும்.

ஆனால்
எனப் படு வ = நிரை நிரை நேர் = கருவிளங்காய்
தியா தெனின் = நிரை நிரை

எனவே காய் முன் நிரை வந்து தளை தட்டியது எனல் கூடாது.

இங்கே எனப்படுவது + யாதெனின் = எனப்படுவதியாதெனின் = எனப்படுவ தியாதெனின்
என்று குற்றியலிகரம் வந்ததால், அதாவது நிலைமொழியின் (எனப்படுவ'து') ஈற்றிலுள்ள
உகரமானது வருமொழி('யா'தெனின்) 'யா' உடன் இணைந்து உகரம் கெட்டு இகரம்
('தி'யாதெனின்) என்று குறைந்து ஒலித்ததால் 'தி' ஆனது தனது ஒரு மாத்திரை அளவில்
இருந்து 1/2 மாத்திரையே பெற்றது. ஆகவே

'தி'யா தெனின் = நேர் நிரை என்றே கொளல் வேண்டும். எனவே இலக்கணப்படி
கருவிளங்காய் முன் நேர் வந்து தளை அமைந்தது.

இதிலிருந்து, குற்றியலிகரம் எப்போது வரும் என்பதும், குற்றியல் உகரத்திற்கும் - இகரத்திற்கும் உள்ள வேறுபாடும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

அடுத்த பாகத்தில் பா வகைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

No comments: