Sunday, July 24, 2005

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 15

பாக்கள் நான்கு வகை:-

1. ஆசிரியப்பா
2. வெண்பா
3. கலிப்பா
4. வஞ்சிப்பா

ஒவ்வொன்றிலும் துறை, தாழிசை, விருத்தம் என்று மேலும் மூன்று இனங்கள் உள்ளன. இவற்றுள் இக்காலத்தில் ஒரு சில மட்டுமே வழக்கத்தில் உள்ளன. கட்டளைக்கலித்துறை,ஆசிரியப்பா, வெண்பா ஆகியவற்றைப் புலவர் பெருமக்கள் விரும்பித் தேர்ந்து பாடல்களை புனைகிறார்கள். சிலர் ஆசுகவிகளாக பாடவும் செய்கிறார்கள். சிலர் தடையின்றி எழுத்து வடிவத்தில் அமைத்துப் படிக்கிறார்கள்.

அருளாளர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பெரியாழ்வார்,
ஸ்ரீ ஆண்டாள், திருமங்கையாழ்வார், குல சேகர ஆழ்வார், நம்மாழ்வார் முதலானவர்கள் இறைவன் அருளால் தாமாகவே பாடினார்கள் என்பதை வரலாறுகள் உரைக்கின்றன. அபிராமி அந்தாதி பாடப்பட்ட விதம் அம்பிகையின் அருள் தன்மையை இயம்புவதாக அமைந்தது.

சான்றோர்கள் தமிழ்ப்புலமை பெற்றுப் பாடிய பாடல்களும் ஏராளம். சங்க காலப் பாடல்கள்
அனைத்தும் அவ்வண்ணமே ஆயின.

எனவே, கவிதைப் புனைய இனிய கருத்தும் அமுத தமிழும் போதுமானது. அதை எளிமையாகவும் அதே சமயத்தில் மரபு தவறாமலும் புனையவேண்டும். அதற்கு இப் பாவகைகள் மிக உதவியாயிருக்கும்.

சரி, முதலில் ஆசிரியப்பாவைப் பற்றிப் பார்ப்போம்.

ஆசிரியப்பா

ஆசிரியப்பா என்பது ஆசிரியர் ஒருவர் மாணவருக்குச் சொல்லும் வகையில் அமைந்ததாகும். நாம் பேசுகின்ற அமைப்பில் இப்பாடல்கள் விளங்குதல் வேண்டும். அதுவே படிப்பதற்கும் கேட்பதற்கும் இனிமை பயக்கும். இதற்கு அடிப்படையாக நாம் கைக் கொள்ள வேண்டிய தளைகள் பின்வருவன:

1. நேர் ஒன்றிய ஆசிரியத் தளை
2. நிரை ஒன்றிய ஆசிரியத் தளை
3. இயற்சீர் வெண்டளை

இந்த மூன்றுத் தளைகளைப் பற்றியும் நாம் தளைகள் பாடத்தில் படித்திருக்கிறோம் என்பதை
நினைவுக் கூர்க!

1. நேர் ஒன்றிய தளை - நேர் முன் நேர் வரும்
2. நிரை ஒன்றிய தளை - நிரை முன் நிரை வரும்
3. இயற்சீர் வெண்டளை - மாறி மாறி வரும். அதாவது, நேர் முன் நிரையும், நிரை முன் நேரும் வரும்.

ஞாபகம் வந்ததா?

குறிப்பு: ஆசிரியப்பாவில் கவிதை புனைவது மிக எளிது. ஏனெனில் அசைகள் ஒன்றாக
( நேர்- நேர், நிரை- நிரை) வந்தாலும், வெவ்வேறாக வந்தாலும் ( நேர் - நிரை, நிரை - நேர்)
தளை தட்ட வாய்ப்பே இல்லை. ஆனால் ஈரசைச்சீர்க்கு மேல் வராது. அதாவது காய், கனி,
பூ, நிழல் சீர்கள் வராது; எனில் புனைவது எளிது தானே!

மாச்சீர்(நேரில் முடியும் சீர்), விளச்சீர் (நிரையில் முடியும் சீர்) ஈரசைச் சீர் என்பதை நினைவுக்
கூர்க! அதாவது ஒரு சீரில் இரண்டு அசைகள் இருக்கும். நேர் அசையில் அச்சீர் முடியப்பெற்றால்
மாச்சீர் ஆகும். நிரை அசையில் அச்சீர் முடியப்பெற்றால் விளச்சீர் ஆகும். மேலும் விளக்கத்திற்கு
முன் பாடங்களைக் காண்க!

சரி.. இனி ஆசிரியப்பாவின் வகைகளைப் பற்றிப் பார்ப்போம்.

நேரிசை ஆசிரியப்பா:-

இவ்வகையானது ஆசிரியப்பாவின் தளைகளுடன் (மா முன் நேர், விளம் முன் நிரை, மாமுன் நிரை, விளம் முன் நேர்) எல்லா அடிகளும் நான்கு சீர்களாய்(அளவடி) அமைந்து ஈற்றயலடி அதாவது கடைசி அடிக்கு முந்தைய அடி முச்சீராக அமைந்து ஈற்றடி 'ஏ' காரத்தில் முடிந்தால் அது நேரிசை ஆசிரியப்பா ஆகும். பொதுவாக ஆசிரியப்பா குறைந்தது 3 அடிகளாவது அமையும்.

எ.டு:-

நீல மேனி வாலிழை பாகத்து
---- ----- --------- --------
1 2 3 4

ஒருவன் இருதாள் நிழற்கீழ்
-------- -------- --------
1 2 3

மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே
-------- ------- ----------- ---------
1 2 3 4


இப்பாடலானது ஆசிரியப்பாவின் இலக்கணத்துடன் மூன்றடிகளில் வந்துள்ளது. ஒவ்வொரு அடியும் நான்கு சீர்களாய்-அளவடியாய் அமைந்து ஈற்றயலடி மட்டும் முச்சீராயும், ஈற்றடி முறையே என 'ஏ' காரத்தில் முடிந்ததால் நேரிசை ஆசிரியப்பா ஆயிற்று.

எ.கா:-

ஈரசைச் சீர்கள் மாவும் விளமும்
ஆகிய நான்கும் தெரிந்தால்
ஆசிரி யப்பா புனைதல் எளிதே!

(நேரிசை ஆசிரியப்பாவில் எழுதியது)

ஆஹா! எவ்வளவு எளிமையாக உள்ளது. இது நானே எழுதியது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். அடுத்த பாகத்தில் பிறவகைகளையும் பார்க்கலாம்.

No comments: