Sunday, July 24, 2005

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 19

கலிப்பா

காய் முன் நிரை வருவது கலிப்பாவுக்கு உரிய இலக்கணம் ஆகும். இது மூவசைச்சீரில் வரும். காய் என்பது மூவசைச்சீர் ஆகும். நான்கசைச்சீரில் பூ முன் நிரையும் வரும்.

கலிப்பாவில் ஈரசைச்சீர்களான மாச்சீரும் விளச்சீரும், மூவசைச்சீரில் விளங்கனிச்சீர் எனப்படும் கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகியனவும் வராது.

ஓசை நயத்தை வைத்து கலிப்பாவினை வகைப்படுத்துகிறார்கள். அவற்றைப்பற்றிக் காண்போம்.

கலிப்பா துள்ளலோசையுடையது. இது காய் முன் நிரையசை வருவது. அதாவது, மூவசைச்சீரையடுத்து நிரையசை வருவாதாகும்.

அருமறையின் நலம் விளங்க
** அவதரித்த ரகுராமா
பெருந்தவத்தின் அருள் விளங்கும்
** பெருமானே புவியமுதே
கருமுகிலின் பெருமழையே
** கலைமணியே கனிந்துறங்கு
திருமகனே எனதுயிரின்
** திகழமுதே தணிந்துறங்கு.

மேற்கண்ட பாடலில் காய்முன் நிரை வந்து கலிப்பாவிற்குரிய துள்ளலோசை பெற்றும், தேமா, புளிமா விளங்கனிச்சீர்கள் வராமலும் இருந்ததால் இது கலிப்பாவில் அமைந்ததாயிற்று.

ஓசை நயம்:-

கலிப்பாவிற்குரிய துள்ளலோசை மூவகைப்படும். அவை ஏந்திசைத்துள்ளல்,
அகவல் துள்ளல், பிரிந்திசைத்துள்ளல் என்பன.

1. ஏந்திசைத் துள்ளல்
இது, காய் முன் நிரை வருவது கலித்தளையாகும்.மேற்கண்ட பாடல் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

2. அகவல் துள்ளல்
இது, நிரையொன்று ஆசிரியத்தளை வருவது. அதாவது கூவிளத்தையடுத்து புளிமாங்காய் வருவது. இதனோடு கலித்தளையும் விரவி வரும்.

எ.டு:-

வண்டுறை நறும் பொய்கை
- வயமோங்கும் கமலத்தைக்
கண்டுறை திருமாதின்
_ கருணையிற் கலந்துறைய
மண்டுறை வறுமையெனும்
_ மதிகெட்ட கொடியவனும்
நுண்டுளிப் புனல் வெயிலில்
_ நுடங்குதல்போல் அழிந்தனனே.

3. பிரிந்திசைத் துள்ளலோசை

இதில் பல தளைகளும் விரவிவரும். அதாவது விளமுன் நேர் வந்து இயற்சீர் வெண்டளையும்,
காய்முன் நேர் வந்து வெண்சீர் வெண்டளையும் வரும். நிரையொன்று ஆசிரியத்தளை வரும்.
கலித்தளையும் வரும்.

எ.டு:-

அதியமான் நன்மனத்தில் ஔவையார் இனிதிருப்ப
நிதியெனக் கனியமுதாய் நெல்லியை உவந்தளிக்கத்
துதிபெறும் நற்றமிழின் ஏற்றத்தை இனிதறிந்து
மதிபெறும் மாந்தரெலாம் மகிழ்ந்தேத்த விழைந்தனரே

No comments: