Sunday, July 24, 2005

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 11

5.5. அளபெடைத் தொடை

ஒரு பாடலின் அடியில் உயிர் எழுத்தோ அல்லது ஒற்றெழுத்தோ
அளபெடுத்து வருவது அளபெடைத் தொடையாகும். இதுவும் முன்னர்க் கூறப்பட்ட
தொடைகளைப் போன்று,

1. இணை அளபெடைத் தொடை
2. பொழிப்பு அளபெடைத் தொடை
3. ஒரூஉ அளபெடைத் தொடை
4. கூழை அளபெடைத் தொடை
5. மேற்கதுவாய் அளபெடைத் தொடை
6. கீழ்க்கதுவாய் அளபெடைத் தொடை
7. முற்றளபெடைத் தொடை

என ஏழு வகையாகும்.

உயிர் அளபெடை

எ.டு:-
யானை வெரூஉ புலிதாக் குறின்.

இங்கே 'உ' என்ற உயிர் எழுத்தானது 'ரூ' எனும் 2 மாத்திரை அளவுடைய நெடிலுடன் இணைந்து
3 மாத்திரை அளவாக ஒலித்து உயிர் அளபெடை ஆயிற்று.

குறிப்பு:-
இதை 'வெரூ' 'உ' என்று பிரித்து வாசிக்கக்கூடாது. வேரூஉ என்பது ஒரே சீர் ஆகையால்
'உ' என்பதை மட்டும் இன்னும் சற்று நீட்டித்து வாசிக்க வேண்டும்.

ஒற்றெளபெடை:-

எ.டு:
எங்ங்கே, அம்ம்பு

உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் உயிர் அளபெடையை உருவாக்க இயலுவதைப் போல மெய் எழுத்துக்கள் பதினெட்டும் தத்தம் ஒலியில் நீட்டித்து வருவதை ஒற்றெளபெடை என்கிறோம். இவை பொதுவாக தளை கணக்கிற்காக மிக அரிதாகவே எடுத்துக்கொள்ளப்படுவதாலும் தற்கால வழக்கத்தில் அவ்வளவாக இல்லாததாலும் அடுத்த தொடையினைப் பற்றிப் பார்ப்போம்.

5.5. இரட்டைத் தொடை:-

ஓரடியில் வந்த சொல்லே மீண்டும் அடுத்து வரும் அடியில் வருவது இரட்டைத் தொடையாகும்.

எ.டு:-
பல்சான் றீரே! பல்சான் றீரே!
பயன்இல் மூப்பிற் பல்சான் றீரே!

இத்தகைய தொடை நாடக நடையில் பெரிதும் கையாளப் படுகிறது.

குறிப்பு: ஒரே அசை சேர்ந்தார்ப்போல் வருவது இரட்டைக்கிளவி ஆகும். ஒரே சொல் சேர்ந்தார்ப் போல் வருவது அடுக்குத்தொடர் ஆகும். ஒரே சொல் வெவ்வேறு இடங்களில் மேற்கூறிய ஏழுவகைகளில் (இணை, பொழிப்பு... இப்படியாக)வருவது இரட்டைத்தொடை ஆகும்.
ஒரே சொல் அல்லது அசை ஈற்றில்(கடைசியில்) மேற்கூறிய ஏழுவகைகளில் வருவது இயைபுத் தொடை ஆகும்.

இயைபு பொருள் தரவேண்டிய அவசியம் இல்லை. தந்தாலும் தவறில்லை. இரட்டைத்தொடை இரட்டையாக வந்து பிற அடிகளிலும் மீண்டும் வரும். இது பொருள் தரும் சொல்லாகவே இருக்கும்.

இரட்டைக்கிளவி ஒலி நயம் மட்டுமே தரும். பொருள் தராது. அடுக்குத்தொடர் பிரித்தாலும் பொருள் தரும்.

No comments: