Sunday, July 24, 2005

மரபுக்கவிதை எழுதுவது எப்படி?- 2

பாகம் - 2

தெருவீதிகளில் வண்ணமிகு கோலங்களை அமைத்து மங்கையர் அழகு செய்கின்றார்கள். அப்போது அவை நன்கு அமைவதற்குக் கருவியாக உள்ளவை அவற்றுக்குரிய கோலப்புள்ளிகளே!

வண்ணக்கோலங்கள் பளிச் எனத் தோன்றினாலும் அதற்குள்ளே விளங்கும் புள்ளிகள் வைக்கப்பெற்று வரையப்படும் கோலங்கள் மிகுந்த எழில்பெறும். இது போல செம்மையான எழில் மேவும் கவிதைகளுக்கு இலக்கண மரபுகள் என்ற கோலப்புள்ளிகள் உதவி புர்¢கின்றன. எனவே இத்தகைய மரபுகளைத் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.

கவ்¢தையின் உறுப்புகள் ஆறு. அவை எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன. தற்போது யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கணமே கவிதைக்கு உரிய இலக்கணமாகப் பெரிதும் கொள்ளப்படுகிறது.

எழுத்து

செய்யுள் உறுப்புகளுள் முதலாவதாக விளங்கும் எழுத்து என்பதைக் காண்போம்.

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் :-

பொதுவாக மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் 21. அவற்றுள்

உயிர் எழுத்துக்கள் = 12
வல்லின எழுத்துக்கள் = க, ச, த, ப = 4
மெல்லின எழுத்துக்கள் = ஞ, ம, ந = 3
இடையின எழுத்துக்கள் = ய,வ = 2

(குறிப்பு: "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல" எனும் நோக்கில் 'ச' சேர்க்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் 'ச' எழுத்து குறிப்பிடப்படவில்லை என்றே கூறப்படுகிறது. அவ்வாறே குறிப்பிடாத பிற எழுத்துக்களும் வர நேரிடலாம்.)

எழுத்து வகைகள்:-

எழுத்து உறுப்புகள் 13 வகைப்படும்.

1. குறில் எழுத்து (குற்றெழுத்து)
2. நெடில் எழுத்து ( நெட்டெழுத்து)
3. உயிரெழுத்து
4. மெய்யெழுத்து
5. உயிர்மெய் எழுத்து
6. வல்லின எழுத்து
7. மெல்லின எழுத்து
8. இடையின எழுத்து
9. ஆய்த எழுத்து
10. குற்றியலுகரம்
11. குற்றியலிகரம்
12. ஐகாரக்குறுக்கம்
13. அளபெடை

மாத்திரை:-

ஓர் எழுத்தை இயல்பாக ஒலிப்பதற்கு ஆகும் நேரம் மாத்திரை என்று கூறப்படும். இந்த மாத்திரை அளவினை வைத்தே எழுத்தானது வகைப்படுத்தப்படுகிறது. எனவே மாத்திரை குறித்து அறிந்துக்கொள்ளுவது கவிதை எழுதுவதற்கு மிகவும் அவச்¢யமானதாகும்.

ஒரு மாத்திரை கால அளவு என்பது கைவிரல் நொடிக்கும் நேரம், அல்லது கண்ணிமைக்கும் நேரம் எனவும் ஆகும். குறில் எழுத்தை ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அளவுக்காலமும் நெடில் எழுத்தை ஒலிப்பதற்கு இரண்டு மாத்திரை அளவுக்காலமும் ஆகும்.

தமிழில் உயிர் எழுத்துக்கள் 12 = அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ.

இவற்றுள்,

அ,இ,உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
குறில் எழுத்துக்களை உச்சரிப்பதற்கு ஆகும் கால அளவு 1 மாத்திரை.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழும் நெடில் எழுத்துக்கள்.
நெடில் எழுத்துக்களை உச்சரிப்பதற்கு ஆகும் கால அளவு 2 மாத்திரைகள்.

மெய் எழுத்துக்கள் 18. அவை,
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகும்.

மெய்யெழுத்துக்கள் 18ம் உச்சரிக்கும் வகைகளைக்கொண்டு

1. வல்லின எழுத்துக்கள் - க், ச், ட், த், ப், ற் - 6

2. மெல்லின எழுத்துக்கள் - ங், ஞ், ண், ந், ம்,ன் - 6

3. இடையின எழுத்துக்கள் - ய், ர், ல், வ், ழ், ள் - 6

என்று பிரிக்கிறோம்.
இவை ஒவ்வொன்றும் அரை (1/2) மாத்திரை உடையது.

18 மெய் எழுத்துக்கள் 12 உயிர் எழுத்துக்களோடு சேர்ந்து ஒலிப்பது உயிர் மெய் எழுத்துக்களாகும். இவற்றின் எண்ணிக்கை 216. இவற்றுள்,

குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (5 * 18) = 90
இவை ஒவ்வொன்றும் ஒரு மாத்திரை கொண்டு இயங்கும்.

நெடில் உயிர்மெய் எழுத்துக்கள் (7 * 18) = 126
இவை ஒவ்வொன்றும் இரு மாத்திரை கொண்டு இயங்கும்.

குறிப்பு : 1. உயிர்மெய்க்குறில் எழுத்துக்கள் க, கி, கு, கெ, கொ.... முதலானவை ஒரு மாத்திரை அளவே. இவற்றை மெய்யெழுத்துக்குரிய 1/2 மாத்திரையோடு உயிர் எழுத்துக்குரிய 1 மாத்திரையும் சேர்ந்து 1 1/2 மாத்திரை என்று கொள்ளக்கூடாது.

குறிப்பு : 2. உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் கா, கீ,கூ, கே, கோ.... முதலானவை இரு மாத்திரை அளவே. இவற்றை மெய்யெழுத்துக்குரிய 1/2 மாத்திரையோடு உயிர் எழுத்துக்குரிய 2 மாத்திரையும் சேர்ந்து 2 1/2 மாத்திரை என்று கொள்ளக்கூடாது.

No comments: