இன்னையிலிருந்து பள்ளி ஆரம்பம். ஹை ஸ்கூல் போறே! விளையாட்டுத்தனத்தெல்லாம்
விட்டுட்டு ஒழுங்கா படிக்கணும் புரிஞ்சதா? அம்மா சொல்ல, சொல்ல தலையாட்டிக்கிட்டே
"மம்மி...... இந்த தாவணிய எப்படிக் கட்டுறது. எந்தப்பக்கம் செருகணும்?"
" நல்ல பள்ளிக்கூடம்டீ... மேஜர் ஆகும் முன்னே என்ன ரூல்ஸோ? "
"ஆமாம் மம்மி.. ப்ளஸ் ஒன், ப்ள்ஸ் டூ கேர்ல்ஸ் கம்பல்ஸரி தாவணி போடணும்.
பொட்டு வைக்கணும். ஒத்த பின்னல் தான் போடணும். வெள்ளிக்கிழமை தவிர
மற்ற நாள் பூ வைக்கக்கூடாது. யூனி·பார்ம் போடாட்டி ·பைன் கட்டணும், பொட்டு வைக்காட்டியும் அமீனாவும் ஆசியாவும் கூட ஸ்கூல்-ல பொட்டு வச்சிக்கிறாங்க... இது அவங்க வீட்டுக்கு தெரியாதாம்." - அவள் கண் சிமிட்டி சிரித்தாள்.
"பிராமின்ஸ் ஸ்கூல்ல சேர்த்தது தப்பா போச்சு... இங்கே காட்டு.. இன்னைக்கு நான் கட்டிவிடறேன். நாளையிலேர்ந்து நீயேதான் கட்டிக்கணும்! "
"ம்..." தலையாட்டிக்கொண்டே காட்டினாள்; வலது இடது தோள்பட்டை, இடுப்பு என ஊசிகளை வாங்கிக்கொண்டது தாவணி.
புதுத்துணி, புதுப்புத்தகம் கமகமக்க புது வகுப்பில் முதல் பெஞ்சில் அமர்ந்தாள். தனது வகுப்புத்தோழிகள் இன்னும் வராததால் மாடியிலேர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். மீண்டும் வந்து பார்த்த போது அவளது பையும், மதிய உணவு கைப்பையும் இருந்த இடத்தை விட்டு வேறு எங்கோ ஒரு மூலையில் கிடக்க, அவள் அமர்ந்திருந்த இடத்தில் வேறு பெண்கள் அமர்ந்திருந்தனர்.
"யாரு இதைத்தள்ளிவிட்டது? நான் தானே முன்பு வந்தேன்..." முறைக்க முறைக்க இவள் பேச ஜீவாவும், கஜலட்சுமியும் இவள் அவளைச்சொல்ல, அவள் இவளைக் கைகாட்டினாள்.
சித்ரா, "கவீ, இவங்க தான் ஜீவரத்தினம், கஜ லட்சுமி... எனக்கு நல்ல பிரெண்ட்ஸ் ஆகிட்டாங்க... எஸ். ஆர். சி யில் இருந்து வந்திருக்காங்க"
"ஓ... ! அது இதை விட நல்ல ஸ்கூலோ, உங்க மார்க்ஸ் என்ன?" கோபம் குறையாமல் கேட்டாள்
ஜீவரத்தினமும், கஜலட்சுமியும் தன்னைவிடக்குறைவான மதிப்பெண்களைக்கூறியதும்
இவள் மதிப்பெண்ணைக் கர்வத்துடன் கூறினாள்.
ஜீவா, "ஸாரி கவீ.. அது உன் பை தான்னு தெரியாம தூக்கி போட்டுட்டோம், இவ தான் வந்தா பார்த்துக்கலாம்னு சொல்லிட்டா"
கஜா, "அய்யோ, நான் அந்தப்பக்கம் தான் வைக்க சொன்னேன்"
சித்ரா, " சரி, சரி, சண்டையவிடுங்க.. இன்னையிலேர்ந்து நாம நல்ல பிரெண்ட்ஸ்..ஓகே வா"
பாடங்கள் முடிந்து,
மீண்டும் மதிய இடைவேளையில்...
சித்ரா வீட்டுக்கு சென்றுவிட.. இவள் மட்டும் தனியாக சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஜீவாவும், கஜாவும் நாங்களும் சாப்பாடு எடுத்துட்டுதான் வந்திருக்கோம்பா... சேர்ந்து சாப்பிடுவோமா?
கொஞ்சம் கொஞ்சமாக அப்போது தான் கோபம் குறைந்தது. "ம்"
ஜீவா, " ஹேய், கஜா நீ என்னடி கொண்டுவந்திருக்கே?"
கஜா, " தேங்காய் சாதம்..."
ஜீவா " கஜா நல்லா தேங்காய் சாதம் செய்வா... கவீ நீயும் சாப்பிட்டு பாரேன்."
" ஸாரி.. தேங்க்ஸ்.. நீயே சமைப்பியா? "
ஜீவா,"அவங்க வீட்டில் இவ சமையல் தான்!"
அம்மா, ஹைஜீனிக் அது இதுன்னு சொன்னதாலோ என்னவோ, ஸ்கூலுக்கு வெளியே வாங்கி சாப்பிடறது, மற்றவங்கக்கிட்ட சாப்பிடறது இப்படி யார்கிட்டேயும் ஒட்டாமலே கொஞ்ச நாள் போச்சு. தண்ணீ கேட்டாக்கூட யாருக்கும் தரமாட்டேன். சாயங்காலம் வர வேணுமே!
பி.டி பீரியட்னா எல்லோருக்கும் சந்தோசம்.. எனக்கு மட்டும் சோகம். அந்த நேரத்துல கூட ஏதாச்சும் புக் குடுத்து, இல்ல லைப்ரரி விட்டாங்கன்னா சந்தோசமாயிடும். அன்னைக்கு ஹைட் ஜம்ப் டெஸ்ட்..
என் பேர் வர வரைக்கும் ரொம்பவே டென்சன். எல்லோரும் எப்படி குதிக்கிறாங்கன்னு பார்த்துக்கிட்டே இருந்து முழி பிதுங்கிருக்கும். என் பேர் சொன்னதும், பக்கத்தில் இருந்தவள்கள் பிடித்து உலுக்க... எழுந்து ஓடினேன்.
அவங்க பேரும் ஜீவா மிஸ்...
கண்ணுக்கு மேலும் கீழும் மையிட்டு, கண்ணை உருட்டி உருட்டி பேசுவாங்க...ரொம்ப ஸ்ட்ரிக்ட் வேற!
Monday, July 04, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment