Wednesday, July 06, 2005

வண்ணத்துப்பூச்சியும், நூலும் - 2

ஆசையாய்ப் பிடித்த
அந்த வண்ணத்துப்பூச்சி
என்னை முத்தமிடவில்லை

அதன் கோபத்தின்மேல்
எனக்குக்கோபம் வந்தது

உனக்குக்கால் இருப்பதால் தானே
முந்துகிறாய்
இரு இரு கயிறால் கட்டுகிறேன்
இறக்கையினால் பற அதுபோதும்

கால்களின் பலத்தையும்
இறக்கையில் சேர்த்து
பறந்தது பூச்சி

பூச்சிக்கோ பூக்களின் தேன்களில் நாட்டம்
நூலுக்கோ பூச்சியின் நிறங்களிலும் கண்களிலும் நோட்டம்

உண்டு களைத்து வந்து
அலுப்பில் 'ப்ச்' என்றது பூச்சி
எனக்கோ
என்னையே முத்தமிட்டதாய்..

பறப்பதால் நீ பறவை ஆகமுடியாது
நீ பூச்சி தான்
சொல்லி எக்காளமிட்டேன் நான்

பிறக்கப்போகும் புழுவிடம்
பூச்சி சொன்னது
"இன்று நீ
என் கைக்குள் இருக்கிறாய்
நாளை என்போல் பூச்சியாவாய்
ஒரு நாள்
பறவையை விட
உயரமாய் நீ பறப்பாய்
உன் கால்களில் நூல் இல்லை"

No comments: