Sunday, July 24, 2005

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 13

அளபெடை மாத்திரை நீட்டிக்கச்செய்யும்
குற்றியலுகரமும், குற்றியலிகரமும் மாத்திரை குறையச்செய்யும்.

மாத்திரை நீட்டல் அளபெடை வேலை
குற்றிய லுகரமும் குற்றிய லிகரமும்
அவ்வாறு மாத்திரை குறைக்கும்
இப்பா கத்தின் விளக்கம் இதுவே
- (நேரிசை ஆசிரியப்பாவில் எழுதியது)

குற்றியலுகரம்

'உ' கரம் என்ற உயிர் எழுத்து ஏனைய மெய்யெழுத்துக்களோடு சேர்ந்து வரும்போது அதனை நிலைமொழியாகக் கொண்டு வருமொழி உயிரெழுத்தை முதலாகக் கொண்டு வந்தால் ஏற்படும் மாறுதலை உரைப்பதாகும். அத்தன்மையில் நிலைமொழியின் ஈற்றில் உள்ள உகரம் கெடுகிறது. வருமொழியில் உள்ள உகரம் நிலை மொழியில் உள்ள மெய்யெழுத்தோடு சேர்கிறது. இதனால்
உகர எழுத்தின் ஒரு மாத்திரை குறைந்து ஒலிக்கிறது. இதுவே குற்றியல் உகரம் எனப்படும். இதற்கு 1/2 மாத்திரை என்க.

இதனை உரை நடையில் எழுதும்போது எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. ஆனால் கவிதைகளில் வரும்போது இத்தகைய குற்றியலுகரத்தால் ஒரு மாத்திரையானது குறைந்து ஒலிப்பதால் தளை தட்டும். ஆதலாம் அத்தகைய குறைபாடு உண்டாகாதவாறு காத்துக் கொள்ள இதைப்பற்றி விரிவாக உரைக்கவேண்டியதாயிற்று.

நன்கு தேர்ந்தவர்களுக் இத்தகைய குற்றியலுகரத்தைக் கையாளும்போது கவனமாகவே
இருப்பர். இத்தகைய குற்றியலுகரத்தைப் பற்றித் தொல்காப்பியமும் உரைக்கிறது. நன்னூலும்
உரைக்கிறது. எனவே, குற்றியலுகரத்தைப்பற்றியும் அதன் வகைகளைப் பற்றியும் பார்ப்போம்.

உகரம் எப்போது குறுகுகிறது?

க், ச், ட், த், ப், ற் என்கிற மெய் எழுத்துக்கள் உகரத்தோடு சேர்ந்து முறையே
கு, சு, டு, து, பு, று என ஆகிறது. இவ்வெழுத்துக்களைக் கொண்டு முடியும் உயிர் எழுத்துக்கள்
வரும்போது உண்டாகும் குற்றியலுகரப் புணர்ச்சியால் உகரம் குறுகி ஒலிக்கிறது. இதனால்
கவிதையில் தளை தட்டும்.

குற்றியலுகரத்தின் வகைகள்:-
குற்றியலுகரம் ஆனது புணரும் நிலைமொழியின் ஈற்றயல் எழுத்தின் தன்மையைப் பொறுத்து

1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
2. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
3. வன் தொடர்க் குற்றியலுகரம்
4. மென் தொடர்க் குற்றியலுகரம்
5. இடைத் தொடர்க் குற்றியலுகரம்
6. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

என வகைப்படுத்தப் பட்டுள்ளது.

1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்

இதில் நெடில் எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு:-
'நா'கு, 'கா'சு, 'மா'டு, 'மா'து, 'பே'று, த'ரா'சு

இங்கே நா, கா, மா, மா, பே, ரா என்ற நெடில் எழுத்துக்களை அடுத்து முறையே
கு, சு, டு, து, பு, று என்ற உகர எழுத்துக்கள் வந்துள்ளன. இனி இவை எப்படி
குற்றியலுகரமாகின்றன என்று பார்ப்போம்.

எ.டு 1:-
'காசு' என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இது 'இல்லை' என்ற சொல்லுடன்
இணைந்து 'காசில்லை' என்ற குற்றியலுகரத்தைத் தருகிறது.

கா | சு + இல்லை = காசில்லை
க்+ஆ | ச்+உ + இ ல்லை = கா ச்+இ ல்லை ( நிலைமொழியின் உகரம் திரிந்தது)

குறிப்பு:-
'காசு' என்பது 'காசி' என்று மாறியதால் அதை இகரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உகரம் கெட்டு தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்ததால் குற்றியலுகரமே ஆகும். மேலும் குற்றியலுகரமானது நிலை மொழி திரிவதால் மட்டுமே உண்டாகிறது; வரும் மொழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். குற்றியலுகரத்திற்கும் குற்றியலிகரத்திற்கும் உள்ள வேறுபாட்டை பின் வரும் பகுதிகளில் ஆய்வு செய்வோம்.

எ.டு 2:-

மா | டு +அல்ல = மாடல்ல
ம்+ஆ | ட்+உ +'அ' ல்ல = மா ட் + அ ல்ல ( நிலைமொழியின் உகரம் திரிந்தது)

'மாடு' என்ற சொல் 'அல்ல' என்ற சொல்லுடன் இணைந்து நெடில் தொடர் குற்றியலுகரம் ஆயிற்று. அதாவது டு என்ற உகர எழுத்தானது 'மா' என்ற நெடிலுக்கு அடுத்து வந்ததாலும் வரும் மொழியின் முதல் எழுத்தான 'அ' உடன் நிலைமொழியின் ஈற்றிலுள்ள உகரம் திரிந்து ட்+உ= டு ஆனது ட்+அ=ட என்று குறுகியதால் நெடில் தொடர் குற்றியலுகரம் ஆனது. அதாவது நெடிலைத்தொடர்ந்த குற்றியலுகரம்.

6.2. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:-

இதில் உயிரெழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: வி'ற'கு, அ'ர'சு, கு'ற'டு, அ'ரி'து, ம'ர'பு, க'ளி'று, மி'ள'கு, வ'ர'கு, அ'ட'கு போன்றவை.

அரசு + ஆட்சி = அரசாட்சி

நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து ர்+அ என்பதில் 'அ' என்னும் உயிரெழுத்தை அடுத்து 'சு' என்ற
உகரம் வந்ததால் உயிர்த் தொடர் உகரம் ஆயிற்று. இது 'ஆட்சி' எனும் வரும் மொழியின் முதலெழுத்து 'ஆ' உடன் இணைந்து நிலைமொழியின் உகரத்தைத் திரித்து அரசாட்சி என்று புணர்ந்ததால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாயிற்று.

6.3. வன் தொடர்க் குற்றியலுகரம் :-

இதில் வல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: சுக்கு, அச்சு, பட்டு, கழுத்து, உப்பு, கசப்பு.

பட்டு + ஆடை = பட்டாடை

இங்கே நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து 'ட்' என்ற வல்லின எழுத்தைத் தொடர்ந்து 'டு' என்ற உகர எழுத்து வந்ததாலும், அது 'ஆடை' என்ற வரும்மொழியுடன் இணைந்து தனது ட்+உ=டு விலுள்ள உகரத்தைத் திரிந்து ட்+ஆ=டா ஆனதாலும் வன் தொடர்க் குற்றியலுகரமாயிற்று.

No comments: