Sunday, July 24, 2005

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 17

வெண்பா

பாடல்களில் வெண்பா வகை மிகச் சிறந்த வாய்ந்தவை. இத்தகைய வெண்பா, குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, அளவடி வெண்பா, ப·றொடை வெண்பா,
கலி வெண்பா என ஐந்து வகைப்படும். வெண்பாப் பாடல்களில் குறிப்பிட்ட கருத்தைக் கச்சிதமாகக் கூறலாம். திருக்குறள், நாலடியார், நளவெண்பா, முதலான நூல்கள்
வெண்பாப் பாடல்களால் ஆனவை.

8.1. குறள் வெண்பா

குறள் வெண்பா இரண்டு அடிகளையுடையது. முதல் அடி அளவடியாக நான்கு சீர்களும் இரண்டாவது அடி சிந்தடியாக மூன்று சீர்களும் கொண்டு வரும். இதற்கு உரிய
யாப்பிலக்கணம்

"மாமுன் நிரையும்
விளமுன் நேரும்
காய்முன் நேரும்
வருவது வெண்டளை"

என்பதாகும். ஈற்றுச்சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்ப்பாட்டில் அமைய வேண்டும். இதில்

ஈரசைச்சீர்: பிறப்பு என்பது புளிமா
ஓரசைச்சீர்: நாள் என்பது மாச்சீர் ( நேரசை)
ஓரசைச்சீர்: மலர் என்பது விளச்சீர் ( நிரையசை)

காசு என்பது நேர்பு எனவும், பிறப்பு என்பதனை நிரைபு எனவும் தொல்காப்பியம் சாற்றும்.


இனி, ஒரு குறள் வெண்பாவை எவ்வாறு அமைக்க வேண்டும் எனக் காண்போம்.

1. பொதுவாக, பொழிப்பு மோனை கொண்டு அமைத்தல் போதுமானது. ஏனையவான இணை மோனை, ஒரூஉ மோனை, கூழை மோனை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய் முற்று மோனையும் சேர்ந்து விளங்குமாறு பாடுவது கவிஞனின் விருப்பம். அடி எதுகை வந்தால் போதுமானது. ஏனைய எதுகைகள் கொண்டு அமைப்பதும் கவிஞனின் விருப்பம்.

2. வெண்பாவுக்குரிய தளை - அதாவது மாமுன் நிரை, விளமுன் நேர், காய்முன் நேர் வருதல் வேண்டும்.

3. ஈற்றுச்சீர் - குறள் வெண்பாவின் இரண்டாம் அடியில் வரும் மூன்றாம் சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்ப்பாட்டில் அமைய வேண்டும்.

4. இப்போது கருத்து மட்டும் உருவாக வேண்டும்.

கம்ப இராமயணத்தில் ஒரு காட்சி. கானகம் சென்ற இராமன், பரதன் வேண்டுகோளை ஏற்று நாடு திரும்ப மறுக்கிறான். பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்தபின்னர் வருவதாகக் கூறுகிறான். எனவே, பரதன் இராமனின் பாதுகையைப் பெற்று அதற்குப் பட்டம் சூட்டிப் பணிகின்றான். அப்போது பரதன் தன் தாயான கைகேயின் வரத்தால் இவ்வாறு ஏற்பட்டதே என்று கலங்குகின்றான். இது ஒரு குறள் வெண்பாவாக வடிவம் கொள்கிறது.

மாது வரத்தால் மயல்சேர வாடினனே
பாதுகையைப் பார்த்துப் பணிந்து

இப்பாடலில்,

1. மாது - தேமா - நேர் நேர்
2. வரத்தால் - புளிமா - நிரை நேர்
3. மயல்சேர - புளிமாங்காய் - நிரை நேர் நேர்
4. வாடினனே - கூவிளங்காய் - நேர் நிரை நேர்
5. பாதுகையைப் - கூவிளங்காய் - நேர் நிரை நேர்
6. பார்த்துப் - தேமா - நேர் நேர்
7. பணிந்து - புளிமா - நிரை நேர் இது பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் வந்தது.

முதலடியில் நான்கு சீர்களும் ம, வ என்ற ஓரின மோனை வந்து முற்று மோனையாயிற்று.
இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் 'ப' என்பது மோனையாக வந்து கூழை மோனையாயிற்று.
இது சிந்தடியாதலால் முற்று மோனையும் ஆம்.

மா'து'
பா'து'கையைப்
- து என்பது அடி எதுகை.

மாமுன் நிரையும், காய் முன் நேரும் வந்து வெண்பாவிற்குரிய இலக்கணம் அமையப்பெற்றது.

No comments: