Sunday, July 24, 2005

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 12

5.7. அந்தாதித் தொடை

ஓரடியின் ஈற்றுச் சீர் அடுத்த அடியின் முதற்சீராக வருது அந்தாதித் தொடையாகும். ஒரு பாடலின் ஈற்றுச் சீர் அடுத்த பாடலின் முதற்சீராக வரும் நூல்கள் பல உள்ளன. கந்தர் அந்தாதி, அபிராமி அந்தாதி, சிவபெருமான் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி முதலான பல நூல்கள் உள்ளன.

எ.டு:-
மூங்கில் இலை மேலே தூங்கும் பனிநீரே
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே
வாங்கும் கதிரோனைத் தாங்கும் எளியோனே
தாங்கும் எளியோரால் வாழும் புவியோரே

இதில் முதலடியின் ஈற்றுச்சீர் அடுத்த அடியின் முதற்சீராக வந்ததைக் காணலாம். இது
அந்தாதித் தொடையாகும்.

எ.டு:-

ஆன்ற நற் காலைக் கதிரவன் தோன்றினான்
தோன்றிய காலைத் தூங்கிருள் அகன்றது
அகன்ற இருளால் கடிமலர் மலர்ந்தது
மலர்ந்ததா மரையை மங்கை கண்டனள்
கண்டநன் மங்கையின் கவின்முகம் பூக்க
பூத்தது முகமோ புதுமலர் மன்னோ!

இதில் முதலடியில் வந்த ஈற்றுச் சீர் இரண்டாம் அடியில் முதற் சீர் கொண்டு வந்தது.
இத்தன்மையில் மூன்றாம் அடியும், நான்காம் அடியும், ஐந்தாம் அடியும் ஆறாம் அடியும் வந்து
அந்தாதித் தொடயாயிற்று.

5.8. செந்தொடை

இதுவரை நாம் கண்ட தொடைகளான மோனை, எதுகை, இயைபு, அளபெடை, இரட்டை,
முரண், அந்தாதி இவை யாவும் இன்றி ஒரு கவிதை அமையுமானால் அது செந்தொடையின் பாற்படுவதாகும்.

எ.டு:-

வாகை சூடிய இளைஞர்கள் எல்லாம்
அவரவர் சால்பு தோன்றச்
செம்பொருள் கண்டு மகிழ்ந்தனர் நன்றே.

இப்பாடலில் எதுகை இல்லை. மோனையும் இல்லை. மற்றும் மொழியப்பட்ட வேறு தொடைகளும் இல்லை. எனவே இத்தன்மையில் முற்கூறிய ஏழு தொடைகளில் எதுவும் வராது செந்தொடை ஆனது.

இதன் நோக்கமானது ஒரு கவிதையில் கூறப்படும் கருத்துக்களை எவ்வாறேனும் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதும் அத்தகைய கவிதைகளை யாப்பு இலக்கணத்தைக் காட்டித் தள்ளிவிடக் கூடாது என்பதும் ஆகும். இதனையே யாப்பருங்கலக் காரிகை ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிவுறுத்தியுள்ளார். தற்போது வழங்கி வரும் பெரும்பாலான புதுக்கவிதைகள் இத்தகைய தொடையழகுடன் விளங்குகின்றது எனில் மிகையாகாது.

இதுவரை யாப்பின் உறுப்புக்களைப் பற்றிப் படித்தோம். அதில் மிக முக்கியமாக அறிந்துக் கொள்ளவேண்டிய எழுத்தின் வகையான குற்றியலுகரத்தைப் பற்றி அடுத்த பாகத்தில் விரிவாகப் பார்ப்போம்.

No comments: