Saturday, July 16, 2005

ஊஞ்சல்

முட்களுக்கும் பூக்களுக்கும்
இடையேயான பாதையில்
நாம் செல்லவேண்டியுள்ளோம்

இது அழகிய புல்பாதை!

முள்ளை நினைத்து
பயப்படத்தேவையில்லை
உனது பாதுகையும்
முட்களை உதிர்க்கலாம்.

நிறமும் மணமும் சிந்தும்
பூக்களைப்பற்றி சுவாரசியம் இல்லை
நீயும் பூ தான்

எனவே
நல்லவைக்கும், அல்லவைக்கும்
நடுவே
ஊசலாடத்தேவையில்லை

பூக்களையும், முட்களையும் நேசி
நிறத்தையும், மறத்தையும் ரசி

உல்லாசமாய் ஊஞ்சலாடலாம்
-------------------------------

கட்டுப்பாடில்லாத ஆனால், மிகக்கண்ணியமான உணர்வு. கோயிலுக்கு செல்வேன். மனமார தரிசிப்பேன். அம்மனோ, முருகனோ, விநாயகரோ, மேரி மாதாவோ, இயேசுவோ - தங்கத்தேரோ, சப்பரமோ, சந்தனக்காப்போ, திரு நீர்ச்சாத்தோ, பூப்பாவாடையோ... அப்படியே லயித்துப் போய் நிற்பேன். ஒன்றுமே எனக்குக் கேட்கத்தோணாது. அதே போல் தான் மனிதர்களையும்...அவர்தம் குணங்களையும்.

நல்லதையும், அல்லதையும் ஒன்றாய் நிறுத்தத்தெரிந்து விட்டால், குறுகலோ - விரிசலோ -வியப்போ நேராது. எல்லோரையும் நேசிக்கும் பக்குவம் கிடைக்கும். சிறிய வயதில் மிகவும் பயந்த சுபாவம் எனக்கு. குழந்தையில் புதியவர்களைக்கண்டால் எனது உடல் நீலமாகி காய்ச்சல் கண்டு விடும் என்பதால் புதியவர்கள் கண்ணில் என்னைக்காண்பிக்கவே மாட்டார்களாம்.
இப்போதும் கூச்ச சுபாவம் உண்டு என்றாலும் நன்கு பழகியவர்களிடம் கூட அத்தனை அன்னியோன்யம் காட்டிக்கொள்ளப்பிடிக்காது. ஆகவே மிகச்சிறிய வட்டத்திற்குள் இருந்து தொலைவை ரசிப்பவள் நான்.

தைரியமாய் நின்று அநீதிக்குக்குரல் கொடுப்பவர்கள், நன்றாகப்பாடுபவர்கள், இசை அமைப்பவர்கள் இப்படி இருந்தாலும் மனமார பாராட்டுவேன். அதே போல் சிறிய வயதில் குடிப்பவர்கள், குழந்தைகளையோ, மனைவியையோ போட்டு அடிப்பவர்கள் இப்படி சின்ன சின்ன தவறுகள் செய்பவர்களை எல்லாம் காணும்போது கூட சண்டைக்குப் போய் நிற்பேன் (யாரென்றே தெரியாவிட்டாலும்)

இப்போது அந்த கோபமும், ரௌத்திரமும் குறைந்து விட்டதாகவே எண்ணுகிறேன். இது பரிணாமவளர்ச்சியின் அடுத்த கட்டம்போல் மனப்பக்குவத்தின் அடுத்த கட்டமாகவே உணர்கிறேன். நினைப்பதை பகிர்ந்து கொள்ளுதல் என்பது என்னளவில் ஏடே..
ஆகவே அதைக்கவிதையாய்ப் பதித்தேன்.

கவிதையின் விளக்கம்:-
---------------------
உலகில் நல்லவர்கள் என்றோ தீயவர்கள் என்றோ பாகுபடுத்தும் அளவிற்கு சாதாரண மனிதர்கள் கிடையாது. மகான்களாக கருதப்பட்டவர்களும் கூட சறுக்கியதுண்டு. ஒவ்வொருவருக்கும் நல்ல பண்புகளும் உண்டு. அவர்களுக்கே கூட சில விரும்பத்தகாத பண்புகளும் இருக்கக்கூடும்.
அதனாலேயே அவர்களை ஒதுக்குதலோ, நல்ல பண்புகளைக்கண்டு மயங்குதலோ தேவையில்லை என்பதே இக்கவிதையின் கருத்தாகும்.

No comments: