Friday, August 19, 2005

காதலிப்பதாகச் சொல்லாதே!

நீட்டித்திருக்கும் உன் தூக்கத்தில்
வண்ணக்கனவுகள் இல்லை

மீள்பார்வைப் பயணங்களில்
பச்சையங்கள் இல்லை

குவித்த சிந்தனைகளில்
சுடரொளிப் பற்றி எரியவில்லை

விரிந்த விலகல்களில்
வானவில் இல்லை

சந்திப்புகளில்
சர்க்கரை இல்லை

பிரிவுகளில்
சயனைடு இல்லை


நீ
காதலிப்பதாகச் சொல்லாதே!

சம்பளத்தின் மீது
சம்மந்தம் செய்வதல்ல
காதல்.

சக்கை உடலுக்குச்
சாறூற்றுவதல்ல
காதல்.

மற்றதற்கு மாற்று
அல்ல காதல்.

காதல்....
நுண்ணிய ரசனைகள்
நுகரும் ரசவாதம்!

ஒளிக்குள்
ஒளிந்திருக்கும்
வெப்பம்போல்

எனக்குள்
உன்னை

உனக்குள்
என்னை

உருக்கி உருக்கி
ஊற்றி சமன் செய்ய முயலும்
ஓட்டைப்பாத்திரம் காதல்

முதலில் பிடிக்கும்
பிறகு குடிக்கும்
கடைசியில் வெடிக்கும்

தொட்டால் விலகும்
விலகினால் துரத்தும்
மூழ்கினால் மிதக்கச் செய்யும்!
அது தான் ஆழம்.

அதுவரை....

நீ
காதலிப்பதாகச் சொல்லாதே!
யார் சொல்லித் தெரியவேண்டும்?
உன்னை நான்
எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை!

யார் சொல்லித் தெரியவேண்டும்?
நீ இல்லாத வெறுமை
எனக்கு எத்தனைக் கொடுமை என்பதை!

யார் சொல்லித் தெரியவேண்டும்?
எனக்குள் நீ நிறைந்திருப்பதை போல
உனக்குள் நான் எங்கேயோ ஒளிந்திருக்கிறேன் என்பதை!

உன் மனம் உன்னிடம்
பேசுவதே இல்லையா?

உன்னைப்போலவே
உன் மனதிற்கும் பிடித்த மொழி
மௌனம் தானோ!

Friday, August 05, 2005

பத்திரிக்கை

பிஞ்சுகளை வெம்பவிடும்.
மலர்களை மணம் பரப்பும்.
காய்ந்த சருகுகளுக்கு கம்பளம் விரிக்கும்.

மக்களுக்கு முகம்பார்க்கும் கண்ணாடி
மந்திரிகளுக்கு மாயாஜால கண்ணாடி
திரையுலகுக்கு அணியும் தங்கக்கண்ணாடி

உருப்படியான பக்கம் இல்லாமல் கூட இருக்கும்
உருவங்களால் பலானம் இல்லாமல் இருக்காது

நான்கு உண்மைகளில்
நாற்பது பொய்கள்

கூவத்தின் சரக்குகளுக்கு
கூவி கூவி வியாபாரம்

நாடி படிக்க வேண்டியவை
இன்று
நாடிப்பிடிக்கும்படி!

Wednesday, August 03, 2005

குதிரை சவாரி (ஏப்ரல் 27,2005)

அது ஒரு அழகான குதிரை
ஆனால் அங்கும் இங்கும் பார்க்கும்
மிக பலமானது,
மிக வேகமானது,
புத்தி கூர்மையானது,
வேடிக்கை பார்க்காதவரை.
அது சாதாரண மனிதனைவிட புத்திசாலி
எது எல்லையோ
அதை அடையும்வரை
அது வேடிக்கை பார்க்கக்கூடாது
கடிவாளமிட்டேன்
ஏறி அமர்ந்தேன்
லட்சியம் என்பதை கண்ணிலும்
கடிவாளத்தைக் கையிலும் வைத்து
எனது பயணம் லட்சியத்தை நோக்கி
நானும் வேடிக்கை பார்க்கக்கூடாது
குதிரையையும் வேடிக்கை
பார்க்கவிடக்கூடாது
புத்திசாலிக்குதிரையோ
மேயும், நடக்கும்
சண்டித்தனம் செய்யும்
விடாமல் விரட்டவேண்டும்
அது ஓடும்போது
எனது கவனமும் சிதறக்கூடாது
குதிரையின் கண் ஒரு கண்
லட்சியத்தின் கண் மறு கண்
ஓடு ஓடு விரட்டு விரட்டு
------------------------

சதுரங்கம் (மார்ச் 15, 2005)

நீயும் நானும்
ஆடும் சதுரங்கம்
அங்கே
யானைகள் இல்லை
குதிரைகள் இல்லை
சிப்பாய்கள் இல்லை
ராஜாவும் நீ
மந்திரியும் நீ
உனது குறியோ
எதிர் அரசை வீழ்த்துவது!
வீழ்த்தத் துவங்கிவிட்டாய்...
உன் ஒவ்வொரு வார்த்தைகளும்
இங்கே ஆயுதம்
எனது சேனைகள் தோற்றன
மந்திரி வியூகம் மழுங்கிப்போனது
உனக்குத் தடைவைக்கும்
ஒவ்வொரு சிப்பாயும்
கடைசிக்கட்டங்களில்
எதிர் அரசிற்கு
சாதகமாகிப் போகின்றன
தோற்போம் எனத்தெரிந்தும்
தொடுக்கிறேன் போர்
எனது ஆயுதங்கள்
ஒவ்வொன்றாய் கழலப்பெற
நிராயுத பாணியாக நான்
மௌனத்தில்...
உன்னை வீழ்த்துவது
எந்தன் நோக்கமல்ல
ஆகையினால்
சரணடைகிறேன்...
உந்தன் அன்பில் தோற்றுப்போய்...

சுனாமி - டிசம்பர் 2004

உன்னை நிறை குடம்
என்றல்லவா எண்ணியிருந்தோம்
ஏன் தளும்பினாய்?

உன் உப்பைத் தின்றதற்காகவா
எங்கள் கண்களை கரிக்கச்செய்தாய்?

எங்கோ மூட்டிய வெப்பம்
இங்கேயும் தணிய வில்லை
உன் அவசரக்காய்ச்சலுக்கு
எங்கள் தீவு வில்லைகளும்
போத வில்லை

ஆசியா கண்டு நாளானது என்று
ஆசையுடன் வந்தாயோ?
ஆணவம் ஏறிப்போய்
அலைக்கழித்து சென்றாயோ?

சிங்கார சென்னையும்
சிதிலமுற்று..
அழகான அந்தமானும்
அலங்கோலமாய்..

காணச் சகிக்கவில்லை
கூறுகட்டிய மீன்கள் போல்
குவியல் குவியலாய் பிணங்கள்

பெற்றோரை இழந்த
பிஞ்சுக் குழந்தைகள்
குடும்பத்தை இழந்த
தனி மரங்கள்
இனி பெற்றுக்கொள்ளமுடியாத
இளம் பெற்றோர்கள்

குருவிக்கும் காக்கைக்கும்
தினை வீசிய கைகள்
இன்று
ஒரு வேளை சோற்றுக்கே
கையேந்துகிறது..

என்றோ புதைத்த வேதி
இன்று
எங்கள் விதிக்கு
வினையானது

சோகத்தின் சாயங்கள்
கரையோரத்தில்
கறுப்பு வண்ணமாய்.

----------------------------