Wednesday, August 03, 2005

சுனாமி - டிசம்பர் 2004

உன்னை நிறை குடம்
என்றல்லவா எண்ணியிருந்தோம்
ஏன் தளும்பினாய்?

உன் உப்பைத் தின்றதற்காகவா
எங்கள் கண்களை கரிக்கச்செய்தாய்?

எங்கோ மூட்டிய வெப்பம்
இங்கேயும் தணிய வில்லை
உன் அவசரக்காய்ச்சலுக்கு
எங்கள் தீவு வில்லைகளும்
போத வில்லை

ஆசியா கண்டு நாளானது என்று
ஆசையுடன் வந்தாயோ?
ஆணவம் ஏறிப்போய்
அலைக்கழித்து சென்றாயோ?

சிங்கார சென்னையும்
சிதிலமுற்று..
அழகான அந்தமானும்
அலங்கோலமாய்..

காணச் சகிக்கவில்லை
கூறுகட்டிய மீன்கள் போல்
குவியல் குவியலாய் பிணங்கள்

பெற்றோரை இழந்த
பிஞ்சுக் குழந்தைகள்
குடும்பத்தை இழந்த
தனி மரங்கள்
இனி பெற்றுக்கொள்ளமுடியாத
இளம் பெற்றோர்கள்

குருவிக்கும் காக்கைக்கும்
தினை வீசிய கைகள்
இன்று
ஒரு வேளை சோற்றுக்கே
கையேந்துகிறது..

என்றோ புதைத்த வேதி
இன்று
எங்கள் விதிக்கு
வினையானது

சோகத்தின் சாயங்கள்
கரையோரத்தில்
கறுப்பு வண்ணமாய்.

----------------------------

No comments: