Wednesday, December 21, 2005

அண்ணா எப்போது வரும்?

எனக்கு முன் பிறந்தாய்
தமையனாய் பிறந்ததால்
'தலை'பாரம் சுமந்தாய்
சுமைகளோடுச் சேர்த்து
என்னையும் சுமந்தாய்

சின்னவயதில்
தோளில் தூக்கிக்கொண்டு
நீ
தென்னையில் மறைந்த
நிலாவைக்காட்டினாய்

பறித்து வந்த ஈச்சம்பழங்களை
தொன்னையில் வைத்து
ஊட்டினாய்

சேற்றில் பாதம்படும் என்று
முதுகில் சுமந்து
உலா சுற்றினாய்

வைக்கோலைத் திரியாக்கி
மாமர ஊஞ்சல் ஆட்டினாய்

முகத்தைப்பொத்திக்கொண்டு
தேனடை அடித்துத் தந்தாய்

வாய்க்காலில் ஓட்ட
காகித ஓடம்
செய்துத் தந்தாய்

நினைக்க நினைக்க
கற்கண்டாய் இனிக்குது

மருக மருக
மெழுகு போல் உருகுது

ஒற்றைக்கதவுமேல் நின்றுக்கொண்டு
அரை ராட்டினம் சுற்றுவோம்
கொம்போடு அப்பா வந்தால்
தலை தெறிக்க ஓடுவோம்

ஊருக்கு நான் வந்தால்
சின்ன ராணி தான் நான்
நம்வீட்டில்...

யானை அம்பாரியாய் நீ
பல்லாக்காய் நீ
ஊஞ்சலாய் நீ
ஊர்வலமாய் நீ
அந்த இளம்பருவம்
மீண்டும் வருமா அண்ணா?

திரவியம் தேட என்று
நம் ஊர் இளவட்டம் எல்லாம்
இன்று வெவ்வேறு தேசத்தில்

மூத்தவன்
படித்தவன்
நீ ஒருவன் என்று
நம் வீட்டுப்பங்காக
சென்றாய் நீ
10 வருடங்களுக்கு முன்பு

உசிரா நம்ம வளர்த்த பாட்டி
உன் மேல் உயிலெழுதி
உசிர விட்டுச்சு...
நீ வரல...

காதலிச்சதால உனக்குமுன்னே
கல்யாணம் பண்ணிக்கிட்டான் தம்பி
நீ வரல...

மண்ணுக்குள் விதைபோட்டால்
பொன்விளையும் நம் பவள தேசம்
பளிங்கு தேசமாச்சுதுன்னு
விளைச்சலில்லாம வீழ்ந்தார்
நம் அப்பா
நீ வரல...

ஒரு கண்ணாலத்த பண்ணி
கண் குளிர பார்க்க மாட்டேனா?
ஓயாம அழுது ஆத்தா
ஆனாலும்
நீ வரல...

நீ பேசாத வார்த்தைகளையெல்லாம்
கரன்சியில் பேச நினைத்தாய்
சோகத்தையோ கண்ணீரில் நனைத்தாய்

அண்ணனுக்கு எப்போ கல்யாணம்?
ஊரெல்லாம் கேட்குது...
எனக்கும் கூட ஆசை தான்!
நேரிலே உன்னைப்பார்க்க...

ஆனா... நான் எழுதியது
அதுக்கில்ல..
மீதி வரதட்சணைய பொங்கலுக்குள்
கொடுக்கணுமாம்

இல்லாட்டி பொங்கப்பானை
உங்காத்தா வூட்டிலேயே பொங்கிக்கோங்கறார்
உன் கறார் அத்தான்..
பொங்கலுக்குள் வந்துடுமா அண்ணா
உன் அடுத்த மாச சம்பளம்?