Wednesday, July 06, 2005

வண்ணத்துப்பூச்சியும், நூலும் - 1

உன் கைகளுக்குள் என்னைப்பிடித்து
மறைத்து வைத்துக்கொள்கிறாய்
நான் முட்டி முனகினால்
உன் இரு விரல்களுக்கிடையே
இறக்கைகளைப் பிடித்துக்கொண்டு
உற்று கவனித்துக் கேட்கிறாய்

நான் பறக்க வேண்டுமென்றேன்

என் கால்களில் கயிறு கட்டி
என்னைப் பறக்கவைத்து
மீண்டும் இழுத்து வைத்து
உனது நண்பர்களிடம்
வித்தை காட்டுகிறாய்

இந்தப்பூச்சி என்னால் பறக்கிறது என்று.

நீ வித்தைக்காட்டும்போதெல்லாம்
எனக்குக் கால் வலிக்கிறது
இறக்கை பிய்கிறது

நான் நோகும்போதெல்லாம்
உன்னை நொந்தேன்
ஆனால் இப்போது
எனக்குக் கோபமெல்லாம்
உன் மேல் இல்லை
இந்த நூலின் மீது தான்.

No comments: