விசில் கொடுத்ததும் ஓடணும். இரண்டு நெட்டுக்குத்தலான கம்பங்களுக்கு இடையே ஒரு கம்பி தடுத்தாற்போல் வைக்கப்பட்டிருக்கும். அந்தக்கம்பியைத் தாண்ட ஒவ்வொருவருக்கும் 3 சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படும். சரியாக குதிப்பதற்கேற்ப உயரங்களும் உயர்த்தப்படும்.
மிஸ் முதல் விசில் ஊதினார்கள்.
ஓடிவந்து குதிக்கும்முன் பயத்தில் கம்பி அருகிலேயே வந்து நின்றுவிட்டேன். மிஸ் " நெக்ஸ்ட் சான்ஸ்...பீஈஈஈஈஈஈஈஇ" ஓடிவந்து கம்பியைக் கையில் பிடித்துவிட்டேன்.
மிஸ் டென்ஷன் ஆகி முறைக்க... "கவிதா, எப்படி ஓடினா பார்த்தீயா இல்லையா?"
பி.டி லீடர் பேரும் அது தான்.
"யெஸ் மிஸ்" அழாத குறையாக சொல்ல
"உனக்கு பேசிக் லெவல் தான் வச்சிருக்கேன்; ம்.... ஓடு" மீண்டும் மிரட்டல்..
இந்தமுறை எப்படியாவது குதித்துவிடவேண்டும்... கண்களை இறுக்க மூடி பிரார்த்திக்கொண்டே
வேகமாக ஓடி குதித்தும், பாவடை தாவணி அதில் மாட்ட கம்பி கம்பத்தை விட்டு கீழே விழுந்தது..
மிஸ், "·பௌவு....ல், இவளுக்கு ஜீரோ போடு". லீடர் குறித்துக்கொண்டாள்.
எனக்கு அழுகை அழுகையாக வந்தது.
பி.டியிலேயும் பாஸ் செய்தால் தான் ரேங்க் வரும். ரேங்க் வராவிட்டால் அய்யோ எத்தனை அவமானம்,அம்மாவிற்கு என்ன சொல்வது?
மிஸ்," நான் வரவரைக்கும் இங்கேயே முட்டி போடு!"
லீடர் மெதுவாக,"அழாதே கவி... நீதான் தியேரியில் நல்ல மார்க் வாங்கியிருக்கேல்ல..
பாஸ் போட்டிடுவாங்க"
எல்லோரும் போய் விட்டனர். பொதுவாக கடைசி பீரியட் தான் பி.டி யாக இருக்கும். எனவே
எல்லோரும் அவரவர் வீட்டுக்கு கிளம்பி விட்டனர். பொழுது இறங்க இறங்க பயம் ஒரு பக்கம்.
க்ளாஸ் ரூம் பூட்டி விட்டால் பையை யார் எடுத்து வைப்பார்கள்? தொலைஞ்சு போச்சுன்னா
அம்மாகிட்டே வேறே திட்டு வாங்கணுமே! அழுகை இன்னும் அதிகமானது.
கொஞ்ச தூரத்தில் என் புத்தகப்பை, மதிய உணவுப்பை இரண்டையும் ஆளுக்கொன்றாக தூக்கிக்கொண்டு அவரவர் பையையும் எடுத்த வாரே வந்து கொண்டிருந்தனர் ஜீவாவும், கஜாவும்.
கொஞ்சம் நிம்மதி.. இப்போது மிஸ் எப்போ வருவாங்க... ஸ்டா·ப் ரூமையே
பார்த்தவாறு கால் வலிக்க முட்டிபோட்டவாரே உட்கார்ந்தேன்.
மிஸ்ஸ¤ம் வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள். யாரோ ஒரு பெண்ணிடம் சொல்லியனுப்பி என்னை வீட்டுக்கு போகச்சொன்னதாக சொன்னார்கள்.
கால்வலி ஒருபக்கம், அவமானம் ஒரு பக்கம் என்று அழுகை நிற்கவே இல்லை.
ஜீவாவும் கஜாவும் எவ்வளவோ ஆறுதல் சொல்லி பாதி தூரம் (அவர்கள் பஸ் ஏறும் இடம் வரை) எனது பையையும் எடுத்து வந்து கொடுத்து விட்டுப்போனார்கள்.
அதன்பிறகு, அவர்கள் என்னை விட்டு விட்டு எங்கேயும் செல்ல மாட்டார்கள். கஜா
எங்களுக்கெல்லாம் வெள்ளி தோறும் அடுக்குச் செம்பருத்திப் பூ கொண்டுவருவாள். செம்பருத்தி தலையில் வைக்கப்பிடிக்காத பழக்கம் அதன் பிறகு மாறியது. அந்த பெஞ்ச் முழுக்க செம்பருத்தியோடு காட்சி தருவோம்.
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி எனது உடமைகளை யாருக்கும் தருவது எனக்கு பிடிக்காது. அதிலும் பேனா, கை எழுத்து மாறிவிடும் என்பதாலும் எங்கே மற்றவர்கள் வாங்கி உடைத்து விடுவார்களோ என்பதாலும் யாருக்கும் தர மாட்டேன். இன்றும் நான் பப்ளிக் எக்ஸாம் எழுதிய பேனா வீட்டில் உள்ளது.
ஒரு முறை ஜீவாவின் பேனா எழுதாமல் போக முதல்முறையாக எனது பேனா அவள் கைக்கு போனது. அப்போதெல்லாம் தலை எழுத்தே மாறிவிடும் என்பது எங்களுக்கு தெரியாமல் போனது. அதன்பிறகு மதிய உணவை நாங்கள் மூவரும் ஒன்றாக பகிர்ந்து தான் சாப்பிட்டு வந்தோம். கஜாவின் தேங்காய் சாதம் என்றால் காலையிலேயே காலி ஆகிவிடும். ஒரு நாளும் இதற்காக அவள் வருந்தியதே இல்லை. எப்போதும் விளையாட்டும் அடிப்பதும், கோவிச்சுப்பதும் பிறகு சமாதானம் ஆவதுமாக இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிய தோழிகள் ஆனார்கள்.
தமிழ் வகுப்பிலும், விலங்கியல் வகுப்பிலும் எங்கள் ராஜ்ஜியம் தான் நடக்கும். செய்யுள் சொன்னால் கோரஸ் பாடுவது; முன் பெஞ்ச்-ல் இருப்பவர்களின் சடைப்பின்னல்களை
ஒன்றாகக்கோர்த்து விட்டு சண்டை மூட்டிவிடுவது;அவள் ரிப்பனில் கொடியேற்றி தேசிய கீதம் பாடி எல்லோரையும் எழுந்து நிற்கவைப்பது; க்ளாஸ் லீடரின் தாவணியின் பின்பக்கம் நீளமாக பட்டம் வால்போல் செய்து ஒட்டி விட்டு அவள் போகும்போதும் வரும்போதும் "ராஜாதி ராஜ..." பாடி ஐஸ் வைப்பது.. பிறகு அவள் பார்த்து உதைக்க வரும்போது பெஞ்ச் மீதும் டெஸ்க் மீதும் ஏறி ஓடி விளையாடுவது என்று அமர்க்களப்படும்.
எங்கள் பெஞ்சில் யாரேனும் ஒருவர் வராவிட்டாலும் போதும். அன்று வகுப்பு ரொம்பவே அமைதியாக இருக்கும். இதெல்லாம் அந்த ஒரு நாள்தான், அடுத்த நாளும் அப்படி இருந்தால் "என்ன சைலண்ட் எல்லோரும் ஆகிட்டீங்க" என்று ஏதோ உடல் நிலை சரியில்லாத குழந்தையை தாய் பார்த்து ஆதங்கப்படுவது போல் மிஸ் உசுப்பேற்றி விட்டு விடுவார்கள்.
க்ளாஸ் டெஸ்ட் வந்தால் இன்னும் ஜோராக இருக்கும். ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு ஆசிரியர் வருவார்; ஆதலால் ஒரே நாளில் இரண்டு மூன்று தேர்வுகளுக்கு கொடுத்துவிடுவார்கள்;
எல்லாவற்றையும் படிப்பது என்பது சாத்தியமற்ற செயல். முதல் நாளே ஆளுக்கொரு பாடம் என்று தேர்வு செய்துகொள்வோம். கணிதம் என்றால் ஜீவா; எஸ்ஸே/ ஸ்டோரி என்றால்
கஜா; வரைவது, கெமிக்கல் ·பார்முலாஸ் என்றால் எனக்கு வந்துவிடும்.·பிசிக்ஸ்
-க்கு சித்ரா.
அப்புறம் என்ன, ஒருவர் பின்னாடி ஒருவர் அமர்ந்து ரொம்ப ஜாலியா டெஸ்ட் எழுதுவோம்.
ஆனா அந்த பேப்பரை எல்லாம் ஒரு நாளும் எங்க மிஸ் திருத்தித் தந்ததே கிடையாது.
ஒருமுறை அம்மாவின் பணி இடத்தில் எல்லோருமாக சேர்ந்து பச்சை மலைக்கு பிக்னிக் செல்வதாக சொன்னார்கள். எங்கள் வீட்டிற்கு மட்டுமின்றி அம்மா பணிபுரியும் இடத்திலும் எனக்கு செல்வாக்கு அதிகம் என்பதால் வந்தால் பப்பியோடு தான் வரவேண்டும் என்பது அம்மாவிற்கு இடப்பட்ட கட்டளை. எனக்கோ என்னுடைய பிரண்ட்ஸ் ஐ விட்டு விட்டு
செல்ல விருப்பமே இல்லை; நான் இந்த யோசனையை தோழிகளிடம் சொன்னபோது எந்த அளவிற்கு இந்த யோசனை நிறைவேறும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் இதில் சித்ரா ரொம்பவே தைரியம் தந்தாள். நான்கு பேரும் சேர்ந்து போய் அவரவர் வீட்டில் பெரியவர்களை எப்படியாவது ஐஸ் வைத்து பர்மிஷன் வாங்கிவிடுவது என்பதே அந்த யோசனை.
சித்ரா வீடு பள்ளிக்கு அருகில், எனவே முதல் படையெடுப்பு ஒரு மதிய உணவு இடைவேளையில் அவள் வீட்டுக்கு... அவள் அண்ணன் இதற்கு ஒத்துக்கொண்டால் போதும் என்பதால் அவரது உத்தரவிற்காக காத்திருந்தோம். அவர், எங்கே போகிறீர்கள், யார் யார் வருகிறார்கள்? எத்தனை நாள்? எவ்வளவு செலவாகும் என்பதெல்லாம் விசாரித்தார்.
இது ஒரு நாள் பிக்னிக் தான் என்றும், காலையில் சென்று மாலையில் வந்துவிடுவோம் என்றும் துணைக்கு அம்மா, மற்றும் அம்மாவோடு பணிபுரியும் டாக்டர்ஸ், நர்ஸ் ஆன்ட்டீஸ்
எல்லோரும் வருகிறார்கள் என்றும், செலவுகளை நான் கவனித்துக்கொள்கிறேன் என்றும் சொன்னபிறகு சம்மதம் கிடைத்தது.
ஒரு நாள் மாலையில் ஜீவாவீட்டிற்கும், கஜா வீட்டிற்கும் செல்வதாக அடுத்த ப்ளான்.
ஜீவாவீடும் கஜாவீடும் ஒரே இடம். இரண்டு தெரு தான் இடைவெளி. இருவர் வீட்டிலும்
நல்ல குடும்ப ஒற்றுமை இருந்ததால் இந்த முறை ஜீவா வீட்டில் கஜா தான் பேசி சம்மதம்
வாங்கினாள்.
ஆனால் கஜா வீட்டில் சம்மதம் வாங்குவது தான் கடினமாய் போய்விட்டது. அவள் இருப்பது அவளது அக்கா, மாமா வீட்டில். இவள் தான் எங்கே எல்லா வேலைகளுக்கும். எனவே அவள் மாமா அத்தனை சாமானியமாக அவளை விட வில்லை. கஜாவின் சின்ன அக்கா கிருஷ்ணவேணி எங்களுக்கு இந்த விசயத்தில் ஒத்துழைப்பு தந்து அவரிடம் பேசி சம்மதம் வாங்கித்தந்தார்கள்.
அப்புறம் என்ன? பச்சை மலைக்கு பயணம்... அன்று அங்கே இருந்த வானரங்களுக்கெல்லாம் விடுமுறை விடச் சொல்லிக்கொண்டே நாங்கள் பயணித்தோம். பெயருக்கேற்பவே வழி நெடுக பச்சை பசேல் என விதம் விதமான மரங்களும், அருவியும், அங்கே இருந்த மலைவாழ் மக்களும் இயற்கை உணவுகளும் எங்கள் கொட்டமும் என மிக உல்லாசமாக போனது. அங்கே தான் முதல்முறையாக சந்தன மரத்தையும், அருவியையும் நேரில் பார்த்தேன்.
அந்த ஆண்டு முழுவதும் ஓடியதே தெரியவில்லை. இடையில் சித்ராவிற்கு ஆஸ்த்துமா இருந்ததால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. அப்போது அவளைப் பிரியும்படி ஆனது.
அடுத்த வருடம் கடைசி வருடம்; ஆனுவல் எக்ஸாம் வந்த போது தான் கொஞ்சம்
சீரியஸாக படிக்க ஆரம்பித்தோம். அப்போது தான் பாடத்திட்டம் அதிகம் என்பதும், இருக்கும்
நேரமோ குறைவு என்பதும் தெரியவந்தது. இரண்டே மாதத்தில் எப்படி படிப்பது என்பது
கேள்விக்குறியானது.
--------
அப்போது தான் ஜீவா, தனது அண்ணன் இன்ஜினியரிங்-இம்ப்ரூவ்மண்ட் தேர்வுக்காக தனி
வகுப்பு செல்வதாகவும், கோர்ஸ் மெட்டீரியல்ஸ் நிறைய வைத்திருப்பதாகவும், கணிதத்தில்
எங்களுடைய க்ளாஸ் ஒர்க்ஸ் -விட எளியமுறைத் தீர்வுகளும் அதில் உண்டு என்றும் சொன்னாள்.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் நாம் அனைவரும் சேர்ந்தே படிக்கலாம் என்றும் சொன்னாள். ஏற்கனவே பச்சைமலை பிக்னிக் -கிற்கு பர்மிஷன் கேட்டதன் மூலமாக அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் எங்களுக்கு அறிமுகம் ஆகி இருந்ததாலும், பேரண்ட்ஸ் மீட்டிங்கில் எங்கள் அம்மா, ஜீவா அம்மா, கஜா அக்கா நல்ல பழக்கமாகி இருந்ததாலும் இதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அந்த பிப்ரவரி, மார்ச் மாதங்கள் கடுமையான பயிற்சியாக இருந்தது. ஒரு நொடியைக்கூட வீண்
செய்யவில்லை. ஜீவா வீட்டு மொட்டை மாடியும், அதில் இருந்த ஒற்றை ஹாலும் படிப்பதற்கு வசதியாக இருந்தது. ஜீவா, ஜீவாவின் அண்ணன், கஜா, நான் நான்கு பேரும் அட்டவணைத்தயாரித்து அதன்படி சேர்ந்து படிப்பதும், குழு விவாதத்தில் ஈடுபடுவதும், எங்களுக்குள்ளே தேர்வு வைத்துக்கொள்வதுமாக அதில் தயாரித்திருந்தோம். அவ்வாறே குறித்த நாட்களுக்குள் எல்லாப் பாடங்களையும் இரவு, பகல் பாராமல் படித்தோம். ஜீவாவின் அம்மா எங்களோடே இருந்து அவ்வப்போது உணவு தாயாரித்து கொடுத்தும், இரவு நேரங்களில் டீ போட்டுக்கொடுத்தும் பக்கபலமாக ஊக்குவித்துக்கொண்டே இருந்தார்.
இரவில் ஜீவா பாதி நேரம் கணக்கு ஒழுங்காக போடுவாள்; மீதி நேரம் சைன் தீட்டா
ப்ளஸ் காஸ் தீட்டா... என்று தூக்கத்தில் உளறுவாள். நாங்கள் அதையும் பார்த்து
சிரிப்போம். "ச்சும்மா இருங்க பிள்ளைகளா.. நான் தூங்கல... படிச்சிட்டு தான் இருக்கேன்னு"
திரும்ப ஆரம்பிப்பா. கஜா தெளிவா இருக்கும்போது எழுதற கெமிக்கல் பார்முலாஸ் விட
தூக்கத்தில் புதுசு புதுசா கண்டுபிடிச்சிருப்பா.
ஒருவழியா ·பைனல் எக்ஸாமும் முடிந்தது. விடுமுறையை உபயோகமாக கழிக்கணும்னு திட்டம்
போட்டிருந்தோம். அதனால் டைப் ரைட்டிங் அல்லது மெஷின் தையல் கற்றுக்கொள்ளணும்னு முடிவாச்சு. ஆனால் எங்கள் வீட்டில் இதற்கு முதலில் அனுமதி கிடைக்கவில்லை. எக்ஸ்ட் ரா ஆக்டிவிட்டீஸ் என்றாலே நோ பர்மிஷன்.
கஜாவும், ஜீவாவும் தையல் வகுப்பில் சேர்ந்து ஒருவாரமாகச் சென்று கொண்டிருந்தார்கள்.
அவர்களே தைத்த சின்ன சின்ன உடைகளை வீட்டில் அம்மாவிடமும் என்னிடமும் காண்பிக்கும்போது எனக்கு அழுகை அழுகையாக வந்தது. நானும் போயிருந்தால் கற்றுக்கொண்டிருப்பேன் என்று அழுதேன். அதன்பிறகு அம்மா சம்மதம் தந்தார்கள். தினமும் 2 மணி நேர தையல் வகுப்பில் மூவரும் சேர்ந்தோம். தையல் வகுப்பிற்கு அருகிலேயே ஒரு சைக்கிள் கடை இருந்தது. எப்படியாவது சைக்கிளும் ஓட்டக்கற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் ஜீவாவிடம் சொல்ல அவள், "நம்ம மூணுபேருக்குமே சைக்கிள் ஓட்டத் தெரியாது? எப்படிக் கத்துக்கிறது?"
கஜா, "நான் சின்ன சைக்கிள் ஓட்டிருக்கேன்"
ஆனால் சைக்கிள் கடையில் இருந்ததோ பெரிய சைக்கிள்கள் தான்.
மறுபடி மறுபடி நான் நச்சரிக்க, ஜீவாவும் கஜாவும் 1 மணி நேர வாடகைக்கு ஒரு சைக்கிளை எடுத்து வந்தார்கள். முதல் வேலையாக எங்களது மூன்று பேரின் பைகளும் கைப்பிடியில் மாற்றப்பட்டன. பக்கத்தில் மைதானம் இருப்பதாகவும் அங்கே ஓட்ட வசதியாக இருக்கும் என்றும் கஜா சொல்ல ஜீவா கைத்தாங்கலாக சைக்கிளை உருட்டி வந்தாள். எங்கள் மூன்றுபேரில் ஜீவா 6 அடிக்கு குறையாத நல்ல உயரம். கஜா அவளுக்கு கழுத்து வரையில் இருப்பாள். நான் கஜாவின் காதுவரை உயரம் இருப்பேன்.
போகும் வழியில் எல்லாம் எப்படி சைக்கிள்-க்கு ஸ்டேண்ட் போடுவது, ப்ரேக் பிடிப்பது என்று
கஜா சொல்லிக்கொண்டே வந்தாள். நான் சைக்கிளின் ஒவ்வொரு பார்ட்ஸாக கை காட்டி
இது என்ன இது என்ன என்று கேட்க அவர்கள் இருவரும் சொல்லிக்கொண்டே வந்தார்கள். நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது அப்பா ஒரு சைக்கிளும் ஒரு மோட்டார் சைக்கிளும் வச்சிருந்தார். ஆபிஸ் போய்ட்டு வந்தார்னா என்னையையும், பாப்பாவையும்... பின்னாடியும், முன்னாடியுமா உட்கார வச்சி ஒரு ரவுண்டு அடிச்சிட்டு தான் தினமும் வீட்டில் நிப்பாட்டுவார். அப்பா இறந்த பிறகு ஊர் விட்டு ஊர் மாறி வந்தோம். அப்பவே அதையெல்லாம் வித்தாச்சு.
மைதானமும் வந்திடுச்சு. எப்ப எங்களுக்கு துறு துறுப்பும் சாதிக்கணும் கத்துக்கணும் ங்கற ஆவல் இருந்துச்சே தவிர எப்படி என்பதெல்லாம் யோசிச்சதே இல்லை... முதலில் உயரம் அதிகமாக இருப்பவர் ஓட்டுவது என்றும், அப்போது தான் அடி படாமல் கால்
ஊன்றிக்கொள்ளலாம் என்றும் நான் சொன்னேன். கஜாவோ, "வெயிட் குறைவா ருக்கவங்கன்னா ஓட்டினா தான் மத்தவங்க தாங்கி பிடிச்சுக்க முடியும்"னு சொன்னா.. சரின்னு என்னைய ஏறி ஓட்டச்சொன்னாங்க..பெடல் மிதிக்கக்கூட எனக்குத் தெரியல.
அப்புறம் கஜா ஸ்டேன்ட் போட்டே ஓட்டிக்காட்டினா. ஸ்டேன்ட் போட்டே ஓட்டியத
பார்த்து நான் சிரிக்கவும் ஜீவா ஸ்டேன்ட் எடுத்துட்டு ஓட்ட முன்னாடி வண்டி வேகமா இழுத்துட்டுப்போய் கீழே விழுந்துட்டா... அப்புறம் தான் புரிஞ்சது.. நாங்க கைப்பிடியில் மாட்டிருந்த பை வெயிட் தான் இழுத்துட்டுப்போயிருக்குன்னு.. அவ கை காலெல்லாம் அடி படவும் சைக்கிள் வேறு ஏதாச்சும் சேதம் ஆகிடும்மோன்னு பயந்தும் மேற்கொண்டு
நாங்க சைக்கிளைத் தொடல்ல. கொஞ்ச நேரத்திலேயே மழை வேற வந்திட்டதால சைக்கிளைத் திருப்பி கடையிலேயே கொடுத்துவிட்டு வந்து விட்டோம்.
அன்று மாலையே எங்கள் பிரிவுக்கு ஆரம்பம் வந்தது எங்களுக்கு அப்போது தெரியவில்லை.
Wednesday, July 06, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment