Sunday, July 24, 2005

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 7

5. அடி

“அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்” - பழ மொழி
“அடிமேல் அடி வைத்தால் பாடல் வரும்” - பா மொழி

கவிதையில் அடி என்பது சீர்களின் அமைப்பையொட்டி வருவது. அடி வகைகளின்
எண்ணிக்கையைப் பற்றிச் சிக்கல் எதுவும் இல்லை. கவிஞர்கள் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு
அமைத்துக் கொள்ளலாம். சீர்களைக் கொண்டு அமைக்கப்படுவது அடி.

யாப்பிலக்கணப்படி “அடி” யை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அவை,

குறளடி
சிந்தடி
அளவடி
நெடிலடி
கழிநெடிலடி


1. குறளடி:-

இரண்டு சீர்கள் கொண்டு வருவது குறளடி.இது ஈரசைச்சீர்களாகவும் இருக்கலாம்.மூவசைச் சீர்களாகவும் இருக்கலாம்.
நான்கசைச் சீர்கள் பாடல்கள் வழக்கத்தில் இல்லை.இதனை இரண்டு ஈரசைச்சீர்களாகக் கொள்கிறோம். எனவே
நான்கசைச்சீர்கள் பற்றிக் கவலைக்கொள்ளவேண்டாம்.

குறளடிக்கு உதாரணம் பார்க்கலாம்.

எ.டு-1:-

காதற் கொழுநனைத்
தீதில் தொழுது
வானுலகு அடைந்தனள்
மானுட மங்கையே.

எ.டு-2:-

கைசிறந்தன கடிவளை
மெய்சிறந்தன மலர்க்கொடி

ஓரடியில் இரண்டு சீர்கள் கொண்டு வருவது குறளடி என்பது இப்போது ளங்கியிருக்கும்.இரண்டு அடிகளில் வந்த போதும் திருக்குறளை ‘குறளடி’ என்று கூறுவதில்லை. ஏனெனில் திருக்குறளின் முதலடியில் நான்கு சீர்களும், இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் வருவதால் அதைக் குறளடி என்று கூற இயலாது. ஆனால் வெண்பாவிற்குரிய இலக்கணத்துடன் இரண்டு அடிகளில் வருவதால் ‘குறள் வெண்பா’ என்றுதான் கூறவேண்டும். வெண்பா பற்றி இனிவரும் பகுதிகளில் பார்ப்போம்.

குறளடி பற்றி ஐயமின்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இதை விளக்கினேன். ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேளுங்கள்.

2.சிந்தடி:-

இது ஓரடியில் மூன்று சீர்கள் கொண்டு வருவது.

எ.டு:-

தேனினும் இனிய வாழ்வை
வானிலும் பெறுதல் வேண்டி
நானிலம் தன்னில் வேள்வித்
தூநெறி தழைக்கச் செய்தான்


மேற்கண்ட பாடலில் ஒவ்வொரு அடியும் 3 சீர்கள் கொண்டு வந்ததால் சிந்தடி என்று அழைக்கப்படுகிறது.

கவிதையில் வெண்பாவின் ஈற்றடியும், ஆசிரியப்பாவின் ஈற்றயலடி எனப்படும் கடைசி அடிக்கு முன்னால் உள்ள அடியும் மற்றும் வஞ்சி விருத்தங்களும் மூன்று சீர்கள் கொண்டு சிந்தடியாக வரும்.

3. அளவடி:-

இது ஓரடியில் நான்கு சீர்கள் கொண்டு வரும்.இத்தகைய பாடல்கள் தாம் பெருவாரியாக
அமைந்துள்ளன.

எ.டு:-

ஈன்றுபுறந் தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!

இச்சங்கப் பாடல் நான்கு சீர்கள் கொண்டு அளவடியாக வருகிறது.இதில்,

முதற்சீர் - ஈன்றுபுறந்
2வது சீர் - தருதல்
3வது சீர் - என்தலைக்
4வது சீர் - கடனே

ஆகும்.

எனவே முதலடியில் 4 சீர்கள் வந்து அளவடி ஆயிற்று. அவ்வாறே 2-வது, 3-வது, 4-வது, 6-வது அடிகளிலும் நான்கு சீர்கள் கொண்டு அளவடி வந்துள்ளது. ஆனால் ஈற்றயலடி, அதாவது கடைசி அடிக்கு முந்தைய அடி (5-வது அடி) மூன்று சீர்கள் பெற்று சிந்தடியாக வந்துள்ளது. ஆசிரியப்பாவில் இவ்வாறு வரும்.இதே போல் குறளடியும் கலந்து வரும். அவை பற்றி ஆசிரியப்பாவில் விளக்கமாகப் பார்ப்போம்.

4. நெடிலடி:-

ஐந்து சீர்கள் கொண்டு வருவது நெடிலடி ஆகும்.

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு
********* வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித்
********* தோனை விளங்குவள்ளிக்
காந்தனைக் கந்தக் கடம்பனைக்
********* கார்மயில் வாகனனைச்
சார்துணைப் போதும் மறவா
********* தவர்க்கொரு தாழ்வில்லையே.

- கந்தரலங்காரம் : 72
இதில்,

முதற் சீர் - சேந்தனைக்
2-ம் சீர் - கந்தனைச்
3-வது சீர் - செங்கோட்டு
4-வது சீர் - வெற்பனைச்
5-வது சீர் - செஞ்சுடல்வேல்

என இப்பாடல் ஐந்து சீர்கள் கொண்ட நெடிலடியாகும்.இந்த 5 சீர்களும் ஒரே அடியில் வந்ததாகவே கொள்ளவேண்டும். அதாவது முதல் வரியில் மூன்று சீர்களும் இரண்டாவது வரியில் இரண்டு சீர்களும் பிரித்து எழுதப்பட்டுள்ளது. இதை இரண்டு அடிகளாகக் கொள்ளக்கூடாது. எனவே தான் மடக்கி (அதாவது 2வது வரி சற்று உள்தள்ளி (இங்கே மடித்து எழுத முடியாததால் நட்சத்திரக் குறியிட்டுக் காட்டியுள்ளேன்)) எழுதப்பட்டுள்ளது.

இவ்வாறே 2,3,4 அடிகளும் வந்துள்ளன.

5. கழிநெடிலடி:-

ஓரடியில் ஆறு, ஏழு, எட்டு என்று ஐந்திற்கு மேல் சீர்கள் கொண்டு வருவது கழி நெடிலடி எனப்படும்.இதற்கு மிகவும் நீண்ட அடி என்பது பொருள்.

எ.டு:-

ஆழிசூழ் உலகம் எல்லாம்
******** பரதனே ஆள நீபோய்த்
தாழிரும் சடைகள் தாங்கித்
******** தாங்கரும் தவம்மேற் கொண்டு
பூழிரும் கானம் நண்ணிப்
********* புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண்டு ஆண்டின் வாஎன்று
********* இயம்பினன் அரசன் என்றாள்.
முதல்சீர் - ஆழிசூழ்
2வது சீர் - உலகம்
3வது சீர் - எல்லாம்
4வது சீர் - பரதனே
5வது சீர் - ஆள
6வது சீர் - நீபோய்த்

என ஆறுசீர்கள் முதலடியில் வந்து கழி நெடிலடி ஆயிற்று.இதுபோன்றே 2,3,4வது அடிகளிலும் கழி நெடிலடிகள் வந்தமையைக் காண்க.

இவ்வாறு 6 சீர்கள் முதல் பதினாறு சீர்கள் கொண்டு ஒரு பாடலின் அடி அமைவது கழி நெடிலடி என்று அழைக்கப்படும்.

No comments: