Sunday, July 24, 2005

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 18

அளவடி வெண்பா

பொதுவாக வெண்பா என்றால் நான்கு அடிகளைக் கொண்டதாக விளங்கும். ஒரே அடியில் நான்கு சீர்கள் கொண்டு வருவது அளவடி எனக் கண்டோம். நான்கு அடிகள்
கொண்டு வரும் வெண்பாப் பாடல்களும் 'அளவடி வெண்பா' எனப்படும். இதனை அளவியல் வெண்பா எனவும் உரைப்பர். மூன்று அடிகளை உடைய வெண்பாப் பாடல்
சிந்தியல் வெண்பா எனப்பெறும்.

இன்னிசை வெண்பா

இதன் இலக்கணம் பின் வருமாறு:

1. முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது அடிகள் நான்கு சீர்கள் கொண்டு இருக்க வேண்டும். நான்காவது அடி மூன்று சீர்களுடன் அமையும்.

2. நான்காம் அடியின் ஈற்றுச்சீர், அதாவது மூன்றாவது சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்பாட்டில் அமையவேண்டும். (காசு, பிறப்பு என்பது குற்றியலுகரம் எனவும், நாள், மலர் என்பது ஓரசையுடைய மாச்சீர், விளச்சீர் எனவும் காண்க.)

3. நான்கு அடிகளின் முதற்சீரிலும் இரண்டாவது எழுத்து ஒன்றி அடி எதுகை கொள்ள வேண்டும்.

4. மாமுன் நிரை, விளமுன் நேர், காய்முன் நேர் என்னும் விதியில் அமைய வேண்டும்.

5. பாடலுக்கு உரிய கருத்து ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய ஐந்து நிலைகளை அடிப்படையாகக் கொண்ட பின்னர் இன்னிசை வெண்பா அமைப்பது எளிது.

(எ.கா)

பூவளரும் காதல் பொருந்தும் குறிஞ்சியொடு
காவளரும் முல்லை கனிமருதம் நெய்தலென்றும்
தேவளரும் பாலையுடன் தேர்ந்து மொழிந்துளதே
மாவளரும் நந்தமிழர் மாண்பு.

அகத்திணை வகையில் காதல் வாழ்வில் மனம் ஒருமித்த தலைவனும், தலைவியும் இணைந்து மகிழ்வது குறிஞ்சி, உள்ளத்தால் ஒன்றி இருப்பினும் உடலால் சிறிது பிரிவு கொள்வது முல்லை. தலைவனின் பிரிவை ஆற்றாது தலைவி புலம்புதல் நெய்தல். தலைவன் தலைவியிடையேயான ஊடலும், பிரிதலும் மருதம் ஆகும். இத்தகைய நெறிமுறையை வகுத்து அவ்வாறு வாழ்வதே தமிழரின் மாண்பு என இன்னிசை வெண்பாவின் இலக்கணத்தில் கவிதை விளம்புகிறது.

நேரிசை வெண்பா

இது இன்னிசை வெண்பாப் பாடலினும் சிறிது மாறுபட்டு வரும். இதில் இரண்டாம் அடியின் நான்காம் சீர் தனிச்சீராக இருக்கும். மற்றபடி இன்னிசை வெண்பாப் பாடலுக்குரிய
இலக்கணமே இதற்கும் உண்டு.

இன்னிசை வெண்பாவில் நான்கு அடிகளிலும் முதற்சீரில் இரண்டாம் எழுத்து ஒன்றி அடி எதுகை பெற்று வரும். நேரிசை வெண்பாவில் முதலடி முதற்சீரிலும் இரண்டாம் அடி முதற்சீரிலும், இரண்டாம் அடியின் நான்காம் சீராக உள்ள தனிச் சீரிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரும். அதாவது முதல் இரண்டு அடிகளில் 'அடி எதுகை' பெறும். இரண்டாம் அடியில் 'ஒரூஉ எதுகை' பெறும். மற்றும் மூன்றாம் அடியின் முதற்சீரும் நான்காம் அடியின் முதற்சீரும் ஒரே எழுத்து கொண்டு அடி எதுகை பெறும்.

அவ்வாறு அமைந்த ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளின் நல்லுரையைப் புகழ்ந்து ஒரு கவிஞர் பாடிய பாடலொன்றைக் காண்போம்.

கண்ணன் திருநாமம் காலையிலும் செம்பவள
வண்ணன் தனிநாமம் மாலையிலும் - திண்ணமிகு
வாஞ்சையுடன் வாழ்த்துகவே என்றுரைத்த சங்கரனார்
காஞ்சிக்கு வாய்த்த கரும்பு.


மீள்பார்வை:-

ஈரசைச்சீரில் மாமுன் நிரையும், விளம் முன் நேரும், அதாவது ஒன்றாத தளை அமையும்படியும், மூவசைச்சீரில் காய் முன் நேர் வருவதும் வெண்பா ஆகும். அடிகளைப் பொறுத்தும் இசை நயத்தைப் பொறுத்தும் வெண்பாவை வகைப்படுத்தலாம். மூன்று சீர்கள் அமையுமாறு எழுதப்படுவது சிந்தியல் வெண்பா என்றும் ஒரு அடியில் நான்கு சீர்கள் வரும்படி எழுதுவது அளவடி வெண்பா எனவும் அழைக்கப்படும். அவற்றில், வெண்பாவின் இலக்கணத்தோடு இரண்டாம் அடியில் தனிச்சீர் பெற்று வருவது நேரிசை வெண்பா எனவும், தனிச்சீரின்றி வருவது இன்னிசை வெண்பா எனவும் அழைக்கப்படும்.

No comments: