5.2. எதுகைத் தொடை
ஒரு பாடலின் முதலடியில் இரண்டாம் எழுத்தும் இரண்டாம் அடியில் இரண்டாம்
எழுத்தும் ஒரே எழுத்தாக அமைவது எதுகை எனப்படும். அது அடி எதுகை எனப்படும்.
எ.டு:-
ஊழிற் பெருவலி யாவுள் மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
- திருக்குறள்
முதலடியில் 'ஊ' என்னும் நெடிலையும் இரண்டாம் அடியில் 'சூ' என்னும் நெடிலையும்
அடுத்து 'ழி' என்னும் எழுத்து ஒன்றி வந்துள்ளதால் இது அடி எதுகைத் தொடை ஆகும்.
குறிப்பு:-
முதலெழுத்து அதாவது மோனையானது ஒரே அளவுடைய மாத்திரையாக இருந்து
இரண்டாவது எழுத்தானது ஒன்றி வந்தால் மட்டுமே அது எதுகைத்தொடையாக அமையும்.
எ.டு:-
யாண்டு பலவாக நரையில் ஆகுதல்
யாங்கா கியர்என வினைவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதந்தலை
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
சான் றோர் பலர்யான் வாழும் ஊரே.
- புற நானூறு.
கேள்வி:-
இப்பாடலில் எதுகைத்தொடை வரும் இடங்களையும்
வராத இடங்களையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
மோனைத்தொடையைப் போலவே எதுகைத் தொடையிலும் வரும் இடத்தைப் பொறுத்து
1. இணை எதுகை
2. பொழிப்பு எதுகை
3. ஒரூஉ எதுகை
4. கூழை எதுகை
5. மேற்கதுவாய் எதுகை
6. கீழ்க்கதுவாய் எதுகை
7. முற்று எதுகை
என வரும்.
1. இணை எதுகை :-
முதல் இரு சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது இணை எதுகை
எ.டு:-
முன்னும் பின்னும் வளம்பெற மொழிதல்
2. பொழிப்பு எதுகை:-
முதல் சீர் மற்றும் மூன்றாம் சீரில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
பொழிப்பு எதுகை.
எ.டு:-
என்னரும் பண்பாய் நன்றெனக் கண்டேன்.
3. ஒரூஉ எதுகை:-
முதல் சீர் மற்றும் நான்காம் சீரில் இரண்டாம் எழுத்து
ஒன்றி வருவது ஒரூஉ எதுகை.
எ.டு:-
மன்னிய செல்வம் மலர்தல் என்றும்
4. கூழை எதுகை:-
முதல், இரண்டாம், மூன்றாம் சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி
வருவது கூழை எதுகை.
எ.டு:-
துன்னிய நன்மை என்றும் நிலைபெறும்
5. மேற்கதுவாய் எதுகை:-
நான்குசீர் உள்ள அடியில் இரண்டாம் சீர் தவிர ஏனைய சீர்கள் எதுகைத்தொடை
பெற்றுவரின் அது மேற்கதுவாய் எதுகைத்தொடை எனப்படும்
எ.டு:-
தன்மை காணும் மிசை
6. கீழ்க்கதுவாய் எதுகை:-
நான்குசீர் உள்ள அடியில் மூன்றாம் சீர் தவிர ஏனைய சீர்கள் எதுகைத்தொடை பெற்றுவரின் அது கீழ்க்கதுவாய் எதுகைத்தொடை எனப்படும்.
எ.டு:-
மின்னும் நன்னெறி எனமேவிச் னியில்
7. முற்று எதுகை:-
முதல் அடியின் அனைத்து சீர்களிலும் எதுகை வருவது முற்று எதுகையாகும்.
எ.டு:-
நன்னுக என்றும் நன்மையும் முன்னுமே
5.3. இயைபுத் தொடை:-
ஒரு சொல் அல்லது அசை மீண்டும் மீண்டும் வருவது இயைபுத் தொடையாகும்.
எ.டு-1:-
உண்டி கொல்லோ! உடுப்பன கொல்லோ!
பெண்டிர் கொல்லோ! பேணுநர் கொல்லோ!
இங்கே 'கொல்லோ' என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்ததால் இது இயைபுத்தொடையாயிற்று.
எ.டு-2:-
ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும்முகம் ஒன்றே
கூறும் அடி யார்கள் வினை தீர்க்குமுகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரைவதைத் தமுகம் ஒன்றே
வள்ளியைம ணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம் அமர்ந்தபெரு மானே.
இதில் 'ஒன்றே' என்னும் சொல் முதல் ஆறு அடிகளில் வந்ததால் இயைபுத் தொடையாயிற்று.
குறிப்பு:-இயைபுத் தொடை இறுதிச் சீரிலிருந்து தொடங்குவதால் இதன்கண் தோன்றும் இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று ஆகிய இயைபுகளையும் அவ்வாறே கொள்ளவேண்டும்.
1. இணை இயைபு (1,2 <---- )
கடைசிச் சீர்களில் முதலிரண்டு சீர்கள் இயைபுத்தொடை பெற்றிருந்தால் அது இணை இயைபு
ஆகும்.
எ.டு:-
என்னை யாளும் எழில்நீ இறைநீ
2. பொழிப்பு இயைபு (1,3 <----)
கடைசியிலிருந்து முதல் மற்றும் மூன்றாம் சீர்கள் இயைபுத்தொடை பெற்றிருந்தால் அது இணை இயைபு ஆகும்.
எ.டு:-
மன்னும் பொருள்நீ மதிக்கும் மறைநீ
3. ஒரூஉ இயைபு (1,4 <----)
கடைசியிலிருந்து முதல் மற்றும் நான்காம் சீர்கள் இயைபுத்தொடை பெற்றிருந்தால் அது ஒரூஉ இயைபு ஆகும்.
எ.டு:-
முன்நீ முடிவில் நிகழும் பின்நீ
4. கூழை இயைபு (1,2,3 <----)
கடைசியிலிருந்து முதல்,இரண்டு மற்றும் மூன்றாம் சீர் இயைபுத்தொடை பெற்றிருந்தால் அது கூழை இயைபு ஆகும்.
எ.டு:-
தரணியின் தாய்நீ தந்தைநீ தயைநீ
5. மேற்கதுவாய் இயைபு (1,3,4 <----)
கடைசியிலிருந்து இரண்டாம் சீர் தவிர ஏனைய சீர்கள் இயைபுத்தொடை பெற்றிருந்தால் அது
மேற்கதுவாய் இயைபு ஆகும்.
எ.டு:-
அருள்நீ அன்பின் யாவும்நீ
6. கீழ்க்கதுவாய் இயைபு (1,2,4 <----)
கடைசியிலிருந்து மூன்றாம் சீர் தவிர ஏனைய சீர்கள் இயைபுத்தொடை பெற்றிருந்தால் அது கீழ்க்கதுவாய் இயைபு ஆகும்.
எ.டு:-
அழகன்நீ ஆதரிக்கும் தெய்வம்நீ திருவம்நீ
7. முற்று இயைபு (1,2,3,4 <----)
அனைத்து சீர்களும் இயைபுத்தொடை அமையப்பெறுவது முற்று இயைபு ஆகும்.
எ.டு:-
குழகன்நீ குலம்நீ குணம்நீ சீலமும்நீ
Sunday, July 24, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment