Sunday, July 24, 2005

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 8

5. தொடை

ஓரெழுத்து ஒருமொழி

சில பாடல்களில் அலகிற்காக அசைகள் ஓரெழுத்தில் வரும்.
ஆனால் அவற்றிற்கு பொருள் இருக்காது. அத்தகைய அசைகளை
ஒரு மொழியாக நாம் ஏற்றுக்கொள்வதில்லை.

எ.டு-1 :-

தீக்குணத்தார் யாவருமென் சீடரெனில் என்னுடைய
தீக்குணத்தின் எல்லைஎவர் தேர்கிற்பார் - ஊக்கமிகு
கல்லோர்க் களிக்கும் நதிச்சடையோய் எற்கருளில்
எல்லோர்க்கும் ஐயுறவா மே
- திருவருட்பா, சிவநேசவெண்பா

இப்பாடலின் கண் நான்காம் அடியில் ஈற்றசையாக வரும் "மே" என்னும் சீரில்
ஓரெழுத்தே வந்தபோதும் இது ஒரு மொழியாகாது.

எ.டு-2 :-

ஏசும் பிறர்மனையில் ஏங்கஅவர் ஈயும்அரைக்
காசும் பெறவிரிக்கும் கைகண்டாய் - மா(சு)உந்த
வீண்டும் சிரங்குனிக்கும் வித்தகனே நின் தலத்தைக்
கண்டும் சிரம்குவியாக் கை.
- திருவருட்பா, சிவநேசவெண்பா

இப்பாடலில் நான்காம் அடியில் வரும் மூன்றாம் சீர் "கை" என்பது ஓரெழுத்து ஒரு மொழியாக வந்த அசை. ஏனெனில் இங்கே "கை" என்ற சீருக்கு பொருள் உண்டு; இது உடலில் உள்ள ஒரு உறுப்பைக் குறிக்கும் பெயர்ச்சொல் ஆகும்.

கேள்வி:-
எங்கே, இவற்றில் ஓரெழுத்து ஒருமொழி எவை என்றும் ஒருமொழி அல்லாதவை எவை என்றும்
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்: [b]கா, ஆ, ஈ, ஏ, பூ

தொடை என்பது பாடலின் ஓரடியில் வரும் சீர்களின் அமைப்புக்களோடு நில்லாது, தொடர்ந்து வருகின்ற இரண்டாவது மற்றும் அடுத்து வரும் அடிகளிலும் உள்ள அமைப்புக்களை எடுத்து இயம்புவதாகும்.

இத்தகைய தொடைகளை எட்டு வகைகளாக யாப்பிலக்கணம் அமைத்துள்ளது. அவை,

5.1. மோனைத் தொடை
5.2. எதுகைத் தொடை
5.3. இயைபுத் தொடை
5.4. முரண் தொடை
5.5. அளபெடைத் தொடை
5.6. இரட்டைத் தொடை
5.7. அந்தாதித் தொடை
5.8. செந்தொடை

என்பன.

5.1. மோனைத் தொடை:-

கவிதைகளில் ஒவ்வொரு சீரிலும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனைத்தொடை ஆகும். இதில் ஓரெழுத்தேயன்றி அதற்கு இன எழுத்துக்கள் வருதலும் மோனைத் தொடையில் அமையும்.

உயிர் எழுத்துக்களில்,

அ, ஆ, ஐ, ஔ - ஓரினம்

இ, ஈ, எ, ஏ - ஓரினம்

உ, ஊ, ஒ, ஓ - ஓரினம்

மெய் எழுத்துக்களில்,

ச், த் - ஓரினம்

ந், ஞ் - ஓரினம்

ம், வ் - ஓரினம்

ஒலி நயத்தை வைத்தே இவ்வாறு இனம் பிரிக்கப்பட்டுள்ளது என்பது உச்சரிக்கும் போதே புரிகிறதல்லவா?

குறிப்பு:-

உயிர் மெய் எழுத்துக்களில் உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் ஒரே இனமாக வந்தால் மட்டுமே மோனைத் தொடையாகு கணக்கிடப்படும்.
எ.டு:

நமச்சி வாயவே ஞானமும் கல்வியும்
நமச்சி வாயவே நான்அறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின்று ஏத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

- அப்பர் தேவாரம்

மேற்கண்ட பாடலில் முதலடியில்,
முதற்சீரின்('நமச்சி') முதலெழுத்து 'ந' , மூன்றாம் சீரின் ('ஞானமும்') முதலெழுத்து 'ஞா' ஒரே இனமாக வந்து மோனைத்தொடை ஆயிற்று.

ஆனால் இரண்டாவது அடியில்,

2-ம் சீரின் ('வாயவே') முதலெழுத்து 'வா', நான்காம் சீரின் ('விச்சையும்') முதலெழுத்து 'வி' இவற்றின் அடிப்படை மெய் எழுத்து 'வ்' ஆக இருந்த போதும் முறையே ஆ, இ இவற்றுடன் இணைந்ததால் இவை மோனைத்தொடையாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. ஏனெனில் ஆ, இ
தத்தமக்குள் இன எழுத்துக்கள் அல்ல.

அதேபோல் நான்காம் அடியில்

2-ம் சீரின் ('வாயவே') முதலெழுத்து 'வா', நான்காம் சீரின் ('காட்டுமே') முதலெழுத்து 'கா' இவற்றின் அடிப்படை உயிர் எழுத்து 'ஆ' ஆக இருந்த போதும் முறையே வ், க் இவற்றுடன் இணைந்ததால் இவை மோனைத்தொடையாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. ஏனெனில் வ், க்
தத்தமக்குள் இன எழுத்துக்கள் அல்ல.

மோனைத் தொடையின் வகைகள்:-

அ) இணை மோனை
ஆ) பொழிப்பு மோனை
இ) ஒரூஉ மோனை
ஈ) கூழை மோனை
உ) மேற்கதுவாய் மோனை
ஊ) கீழ்க்கதுவாய் மோனை
எ) முற்று மோனை
ஏ) அடி மோனை

மோனையின் வகையானது இடம்பெறும் சீரின் தன்மையைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது.

அ) இணை மோனை:- [1 மற்றும் 2]

ஒரு அடியில் முதல் சீரிலும், அதற்கடுத்த இரண்டாவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு
பாடலைத் தொடுப்பது இணை மோனை எனப்படும்.

எ.டு:-

அன்னையின் அன்பில் எல்லோரும் திளைக்க

ஆ) பொழிப்பு மோனை:- [1 மற்றும் 3]

ஒரு அடியில் முதல் சீரிலும், மூன்றாவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு
பாடலைத் தொடுப்பது பொழிப்பு மோனை எனப்படும்.

எ.டு:-

அகமெனும் இனிய அகத்தினில் மேவும்

இ) ஒரூஉ மோனை:- [1 மற்றும் 4]

ஒரு அடியில் முதல் சீரிலும், நான்காவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு
பாடலைத் தொடுப்பது ஒரூஉ மோனை எனப்படும்.

எ.டு:-

அசைவிலா நன்னெறி விளங்கும் அறிவால்

ஈ) கூழை மோனை:- [1,2 மற்றும் 3]

ஒரு அடியில் முதல் சீரிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு பாடலைத் தொடுப்பது கூழை மோனை எனப்படும்.

எ.டு:-

அவனியும் அருட்கண் அமைந்து மலர

உ) மேற்கதுவாய் மோனை:- [1,3 மற்றும் 4]

ஒரு அடியில் முதல் சீரிலும், மூன்றாவது மற்றும் நான்காவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு
பாடலைத் தொடுப்பது மேற்கதுவாய் மோனை எனப்படும்.

எ.டு:-

அரும்பும் இனிமையும் அதன்வழி அணிகொளும்

ஊ) கீழ்க்கதுவாய் மோனை:- [1,2 மற்றும் 4]

ஒரு அடியில் முதல் சீரிலும், இரண்டாவது மற்றும் நான்காவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு பாடலைத் தொடுப்பது கீழ்க்கதுவாய் மோனை எனப்படும்.

எ.டு:-

அருந்தமிழ் அழகும் பொழிந்தது அதன்தலை

எ) முற்று மோனை:- [1,2,3 மற்றும் 4]

ஒரு அடியில் முதல் சீரிலும், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு பாடலைத் தொடுப்பது முற்று மோனை எனப்படும்.

எ.டு:-

அறநெறி அங்கே அரசென ஆகி

ஏ) அடி மோனை:-

ஒரு பாடலின் எல்லா அடியிலும் முதலெழுத்து ஒன்றி வருவது போல் தொடுப்பது அடி மோனைத்தொடை எனப்படும்.

எ.டு:-

மேற்கூறிய 'நமச்சிவாய'ப் பாடலில் அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வந்ததால் அப்பாடலை அடி மோனையாகக் கொள்ளலாம்.

நமச்சி வாயவே ஞானமும் கல்வியும்
நமச்சி வாயவே நான்அறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின்று ஏத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
- அப்பர் தேவாரம்

No comments: