Tuesday, March 22, 2005

இது குழந்தை பாடும் தாலாட்டு!

வெள்ளி நூல் சூடிய விடிவெள்ளியே!
மூக்குத்தி அணிந்த முழு நிலவே!
உன் பாத மென்மை காண
சந்திரன் மிதியடி ஆகுமம்மா!
தன்னை உருக்கி நகைகள் செய்ய
சூரியனும் உலைகள் ஓடுமம்மா!

உன் கை அகலம் கண்டு நாணித்தான்
கடல்களும் பூமியின் கரையில் ஒதுங்கினவோ!
காணாத துயரத்தில் தான்
அலைகளும் மோதி தவித்தனவோ!

எனக்கும் ஒரு வாய்ப்பு கொடு!
பிள்ளை! வரம் கேட்கிறேன் - நீ
பிள்ளையாகும் வரம் கேட்கிறேன்!

பாதபூஜை செய்துத்தான் என்
பாவங்களை போக்கிடுவேன்!
கண்ணின் இமையாய் இருந்துதான்
கருத்தாகக் காத்திடுவேன்!
தாய்க்கு தாயாய் இருந்து தான்
உன் மறுபிறப்பை காட்டிடுவேன்!

மருதாணி இட்டு அழகு பார்த்த
இந்த
மகராசி கைகளுக்கு பூக்களின் புல்லிகள்
கூட உறுத்திட விடமாட்டேன்!

இரவு பகல் பாராமல்
உழைத்து உழைத்து
இளைத்திட்ட தேகத்தை
நோகாமல் தாங்கிடுவேன்!

பணியாட்கள் பலர் இருந்தும்
பக்குவமாய் சமைத்திடுவேன்!
பதம்பார்த்து சுவை சேர்த்து
நேரம் தவறாமல்
மருந்தோடு பழங்களையும்
கசக்காது ஊட்டிடுவேன்!

கண்ணில் புள்ளிகள்
விழுந்து விட்டால்
பாவையாக மாறிடுவேன்!
விரும்பும் நூலையெல்லாம்
வாசித்தே காட்டிடுவேன்!

தூக்கம் கண்களை தழுவும்போது
உன் தாலாட்டை பாடித்தான்
ஊஞ்சலில் இதமாய்
தூங்கவைப்பேன்!

தோட்டத்தில் கூட துருத்தாத
புல்வெளி நடைபாதை விரித்திடுவேன்!
பேரக்குழந்தைகள் விளையாட
பூங்கா அமைத்து கொடுத்திடுவேன்!

சோறூட்ட எனக்காக
தூரத்தில் காட்டிய
அம்புலியை
ஆறேழு மாடி கட்டி
அருகமரச்செய்திடுவேன்!

நீ விரும்பும் யாத்திரைக்கு
கம்பளி போர்த்தி
அழைத்துச்செல்வேன்!

உன்
மூச்சு வாங்கும் மூட்டுகளுக்கு
மடிச்சுமைதாங்கி ஏந்திடுவேன்!

எனக்கும் ஒரு வாய்ப்புகொடு!
பிள்ளை! வரம் கேட்கிறேன்!
நீ
பிள்ளையாகும் வரம் கேட்கிறேன்!

No comments: