அலரும் அலாரத்தை
அமட்டிய பின்னும்
அலுக்காத மஞ்சம்!
பல் துலக்காமல்
படுக்கைக் காபி!
மெத்தை விரிப்பில்
நாளிதழ் கொறிப்பு!
அன்னையின் கைவரிசையில்
நல்லெண்ணெய் முழுக்கு!
"சோம்பேறிக்கழுதை" தூபத்துடன்
சாம்பிராணிப்புகை தலை வாரல்!
உதவிசெய்யும் தோரணையில்
வறுக்காத முந்திரியும்
துருவிய தேங்காயும்..
உப்புப்பார்க்கும் சாக்கில்
ஒத்திகை சாப்பாடு!
பார்க்காத தோழிகளிடம்
தொலைபேசி அரட்டை!
நையாண்டிக்காகவே
தொலைக்காட்சித் தொடர்கள்!
ஆறுநாள் அனாதை
'மொட்டை'மாடிக்கு
வார இறுதியில்
வாண்டுகளுடன்
வட்ட மேசை
'கூந்தல்' அலங்காரம்!
கூடடைந்த குருவியும்
குனிந்து வாங்கும்
உருண்டைப்பிடி
நிலாச்சோறு!
தூங்கிய பின்னும்
நெஞ்சின் மீது
மூச்சு வாங்கும்
புத்தக பக்கங்கள்..
படபடக்கும் நாட்காட்டியிடம்
சுழலும் காற்றாடி கேட்டது
எப்போது வரும்....
அடுத்த ஞாயிறு?
Saturday, March 19, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment