வரதட்சணை வம்சத்தில்
வந்து விழுந்த
சினைக்குஞ்சுகள் நாங்கள்
கள்ளிப்பால் புகட்டும் காட்டில்
கன்றுப்பால் தாய்ப்பாலானதால்
தப்பிப்பிழைத்தோம் நாங்கள்
சா(ஆ)ண்பிள்ளை வாரிசுக்காய்
வரிசையாய்ப் பிறந்ததால்
கூலிக்கூழ் குடித்தோம் நாங்கள்
அப்பிள்ளை அழகாய் போக
தப்பில்லை அழுக்கானாலும்
அடுப்புக்கரி யானோம் நாங்கள்
சுள்ளிக்குச்சி கொண்டாறேன் ஆத்தா
சுல்லென சுடும் வெய்யிலில்
அடுப்பெரிக்க சுட்டோம் நாங்கள்
அஞ்சு நாள் நிதம் போனா
அச்சுவெல்ல உருண்டை தருவாங்களாம்
பள்ளிக்கூடம் பார்த்தோம் நாங்கள்
ஒண்ணே ஒண்ணு! எங்க
கண்ணே கண்ணு!
கருவேப்பிலை கொத்தேனு
தம்பிய கொஞ்சினாங்க..
கெஞ்சவில்லை நாங்கள்
பத்தாப்பு படிச்சா போதும்
படிச்சவன் யாரு இருக்கா?
பொங்கிப்போட படிப்பெதுக்கு?
சீர் செய்ய செலவெதுக்கு?
பொங்கவில்லை நாங்கள்!
கண்ணுக்குள்ளே வச்சிருப்பேன்
கண்மணியே உன்னை நானும்!
கண்ணாளன் சொன்னாலும்
அரைவயறுக் கஞ்சி ஊத்தி
அஞ்சுபவுன் சங்கிலிபோடும்
அப்பன் பார்த்த மாப்பிள்ளை
தான் நிமிர்ந்து பாரோம் நாங்கள்!
சாதிக்கிளை ஒடிச்சி
புங்கம்பூ பூத்தாலும்
ஓடிவரும் ஒருதண்ணி
செம்மண், களிமண்
கலந்தாலும்
நட்புத்தூண்கள்
நாற்புறமும் காத்தாலும்
வீட்டின் கூரை தாங்கி
சுவர்களாய் இருப்போம் நாங்கள்
மூலையில் இருப்போரை
மூளைச்சலவை செய்தாலும்
கோபக்கோஷங்கள் கொண்டு
கொதித்தே எழுந்தாலும்
சுற்றும் உள்ள பூமி
சற்றே உயர்ந்தாலும்
மௌன ஓட்டுக்குள்ளே
மறைந்தே இருப்போம் - நாங்கள்
குனிந்து குனிந்தே
கூன் விழுந்த குமரிகள்.
Thursday, March 17, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment