Saturday, March 26, 2005

உணர்வுகளோடு

கனன்றுகொண்டிருக்கும்
தீப்பிழம்பின் மேற்சாம்பலில்
நம் புன்னகை பூக்கள்
கருகாமலிருக்கின்றன!

என் இதயத்தை நானே
அறுவைசிகிச்சை
செய்து கொள்ளும் பொருட்டு
பார்வையாளனாக
வந்துபோகிறாய் அவ்வப்போது!

சிறுக சிறுக
சேர்த்துவைத்து
கட்டிய கோட்டையை
செல்லரிக்கச்செய்து
அதன் ஓட்டைகளில்
காற்று வாங்கிக் கொள்கிறாய்!

ஆறவிட்ட ரணத்தின்
அடித்தளத்தை
சொறிந்துபார்த்து
உயிரோடிருப்பதை
உறுதி செய்து கொள்கிறாய்!

எழுதி வையுங்கள்
என் கல்லறையில்...

"உயிரோடிருக்கும்போதே
உணர்வுகளோடு
புதைக்கப்பட்டவள்" என்று!

No comments: