Sunday, April 03, 2005

சின்ன கண்ணனுக்கு...

அழகாய் தவழ்ந்து வரும்
ஆலிலைக்கண்ணா வா!
தத்தி தத்தி நடந்து வரும்
தங்க ரதமே வா!
ஓர் விரல் கடித்து
புன்னகை புரியும்
ஒற்றை மயிலே வா!
காலைத்தூக்கி வாயில்
கடிக்கும் கட்டழகே வா!
கொள்ளைப்போகுது
எந்தன் நெஞ்சம்
உன்னில் தானேடா!
கொள்ளை அடித்தவனே!
கள்வனே கொஞ்சம் வாயேன்டா!
குழலால் ஊதி
கீதம் இசைத்து
என்னை மயக்குகிறாய்
ஓரக் கண்ணால்
பார்த்து நீயும்
யாரைத்தேடுகிறாய்?
வெண்ணெய் தரவே
கைகள் நீட்டுகிறாய் - நான்
ஊட்டச்சொன்னால் என்
கண்கள் மூடுகிறாய்
ஒன்றும் தராது
ஏப்பம் விடுகிறாய்
உதட்டில் கொஞ்சம்
ஒட்டி இருக்கிறதே!
உறிஞ்சி நானும்
எடுத்துக்கொள்ளட்டுமா?
உன் பிஞ்சுக்கைகளை
வருடிக்கொள்ளட்டுமா?
உள்ளங் கால்களில்
ஓவியம் வரையட்டுமா?
நீ சிரிக்கும்போது
கட்டி அணைக்கட்டுமா?
நீ மழலை பேசுகையில்
நெஞ்சம் பறக்குது
'அம்மா' எனும் போது
உலகம் மறக்குது
தோளில் போட்டு
தட்டிக்கொடுத்திடுவேன்!
தாலால் பாடி
தூங்க செய்திடுவேன்!
கண்ணா உறங்கு
ஆராரோ! என்
கண்ணே உறங்கு ஆரிராரோ!

No comments: