பொய்களைத் தலையில் சூடி உன்
தலைக்கனம் ஏற்றும் மட்டும்
அலங்கார மோகம் உன்
ஆசைகளை மொய்க்கும்மட்டும்
ஆடம்பர நாகரிகம் உன்
ஆர்வத்தை ஆர்ப்பரிக்கும்மட்டும்
குட்டக் குட்டக் குனிந்து நீ
தியாகிப்பட்டம் ஏற்கும் மட்டும்
மட்டந்தட்டி பேசுவோரிடம்
உரிமைப்பிச்சை கேட்கும் மட்டும்
ஊடகங்களில் சதைகளைக் காட்டி
மதிகளை மயக்கும் மட்டும்
பெண்ணே! நீ
அடிமை போதையிலிருந்து
மீள முடியாது!
காவல் துணையோடு
உலா வருவதற்கு
உனக்கு எதற்கு கால்கள்?
பெண்ணே! நீ
கோப்பை அல்ல!
விரசத்தை நிரப்பி
விலை போவதற்கு!
சொர்க்கமே என்றாலும்
சொந்தக்காலில் நின்றிடு!
பள்ளிக்கு செல்லேல்
கள்ளிப்பால் அருந்திடு!
அறிவுக்கண் கொண்டு
ஆழ்ந்துணர்ந்து வென்றிடு!
அன்பால் அகிலத்தை
அரவணைத்துச் சென்றிடு!
ஏன் என்ற கேள்வி தான்
அடிமைத்தனத்திற்கு மருந்து!
உன் காலில் நீ நிற்கும் நன்னாளில்
ஊருக்கு வை விருந்து!
அன்று சாதனைப்புன்னகை
சூட்டட்டும் உனக்கு
வெற்றியின் மகுடம்!
Saturday, April 02, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment