Sunday, April 03, 2005

முதல் காதல்

முதன் முதலில்
சந்திக்கப்போகிறேன்
அவனை...
என் காதலியை
நாளை மணமுடிக்கப்போகும்
அவனை...
எப்படி இருப்பானோ?
என்னை விட அறிவானவனோ?
என்னை விட அந்தஸ்தானவனோ?
எனக்குத்தெரியும் - அவள்
அழகிற்கு மயங்குபவள் அல்லள்!

எப்படி பேசுவது அவனிடம்?
பொறாமைத் தீயை
வார்த்தைகள் கொப்பளித்துவிடுமோ?
அவமானம் தாங்காமல்
கண்ணீர் குண்டுகளை
கண்கள் பொழிந்துவிடுமோ?
குரல் அடைத்து
நா தழுதழுத்துவிடுமோ?

ஒத்திசைவில்லா மனதால்
ஒத்திகைகள் கூட
ஒத்திப்போடப்பட்டன!

ஆனால் அவனோ
என் வாசலுக்கே
வந்துவிட்டான்
பத்திரிக்கை ஏந்தியவாறு!

யாரோ ஒருவர்
என் பெயரையும்
பணியையும் கூறி
அறிமுகம் செய்துவைக்க
உடனடி புன்னகையை
உதட்டில் ஒட்டவைத்துக்கொண்டேன்..

எப்படியும் அவனிடம்
சொல்லிவிட வேண்டும்..
அவள் தான் என் கனவு தேவதை என்று
அவள் என் உயிராய் இருந்தாள் என்று
அவளை நீ
இரவு பகல் பாராமல்
கண்ணில் மணிபோல் எப்போதும்
காக்கவேண்டும் என்று
காசு பணம் கேட்டு அவளை
களங்கப்படுத்திவிடக்கூடாது என்று

என் உதட்டை பிரிக்கும்முன்
பத்திரிக்கையை கையில் கொடுத்தான்
"இருபத்து நான்கு மணி நேர
இலவச மருத்துவமனை
ஆரம்பிக்கப்போகிறேன்
வந்து விடுங்கள்" என்று

மகிழ்ச்சி பொங்க
எதுவும் பேசாமல்
வாங்கிக் கொண்டேன்

அவன்
எங்கள் ஊரின்
முதல் மருத்துவன்.

No comments: