Sunday, April 10, 2005

அவள் போனால் என்ன?

அவள் போனால் என்ன?
அவளைப்பார்த்தா நான் பிறந்தேன்?
அவளால் தானா நான் வளர்ந்தேன்?
அவளே என் வாழ்க்கையாவதற்கு...
அதோ
என்னோடு நடை போடும்
அந்த மேகம்..
இதோ என் பின்னே உலாவரும்
இந்த நிலா..
வெறுத்து வெளியேற்றியும் என்னை
விரும்பும் இந்தக் காற்று..
எப்போதும் என்னுடன் இருக்கும்போது
அவள் போனால் என்ன?

இனிமை தனிமை

வெறும் தனிமை, ஆனால்
வெறுமையில்லா தனிமை
சுதந்திரமான இனிமை
வானுக்கு அடிமையில்லாத மேகம்போல்
கரையைக்கண்டு ஒதுங்காத மீனைப்போல்
தட்டுகளுக்கு செவிசாய்க்காத தராசுபோல்
பூட்டுகளுக்கு பயந்துவிடாத காற்றைப்போல்
உன்னோடு நீ
சுயத்துடன் இருக்கும்
இந்தத் தனிமை
மிக மிக இனிமை
ஆலாபனை இல்லை
ஆட்சேபணை இல்லை
ஆரவாரம் இல்லை
ஆனந்தமே எல்லை!
இந்தத் தனிமை
மிக மிக இனிமை
இனி யாரும் வெறுக்கவேண்டாம்
இந்த வெறுமையில்லாத தனிமை
மிக மிக இனிமை

Monday, April 04, 2005

அங்கே எவரும் இல்லை

நீலக்கடல்...
அங்கே,
ஆரவாரமாய் அலைகள்
அமைதியாய் சில படகுகள்
அடியில் பல ஜீவன்கள்..
தூங்கிக்கொண்டு சில
தூங்காமல் சில
கண்ணுக்குத்தெரிபவை
அலைகள் மட்டுமே!
விளக்கடித்து பார்த்தால் மட்டும்
சில விஸ்வ ரூபங்கள் தெரியும்
இன்னும் இன்னும்
ஆழத்தில் இருப்பவை
கடலும் அறியாதது..
ஆனால்
அங்கே எவரும் இல்லை..
இருளைத்தவிர.

என் கண்ணில் ஏன் விழுந்தாய்?

பார்வையாக சில நேரம்
பாவையாக சில நேரம்
காட்சியாக சில நேரம்
காவலாக சில நேரம்
தூசியாக சில நேரம்
தூண்டலாக சில நேரம்
கனவாக சில நேரம்
கனமாக சில நேரம்
எப்போதும் என் கண்ணில்
நிறை சிறை இருக்கிறாய்
என் கண்ணில் ஏன் விழுந்தாய்?

இன்றும் நீ

உன்னை நினைக்காத பொழுதுகள்
உண்டென்றால் அது என்
நினைவில்லா பொழுதுகள்!
கனவில்லா தூக்கம்
தூங்கத்தான் பிடிக்கும்
உன் கனவிற்காய் தூங்குகிறேன்
பகல் பொழுதில்..

தும்மும் நேரத்தில் கூட
அனிச்சையாய் எங்கே
உன் பெயர் உதிர்ந்திடுமோ?
முகத்தை மூடிக்கொள்கிறேன்
முற்றிலுமாக..

சிறு பிள்ளையிலே
பிரியும் கணங்களிலே
வழியும் ஆறுகள் கண்களிலே
'மாறிவிட்டாய் இப்போது' என்றாய் நீ!
ஆம்! விவரம் தெரிந்தபின்
திரை மறைவில் தான் இப்போதெல்லாம்

ஆனால், நீ
இன்றும் மாறவில்லை!
அதே, கல் நெஞ்சன் தான்!!

Sunday, April 03, 2005

சின்ன கண்ணனுக்கு...

அழகாய் தவழ்ந்து வரும்
ஆலிலைக்கண்ணா வா!
தத்தி தத்தி நடந்து வரும்
தங்க ரதமே வா!
ஓர் விரல் கடித்து
புன்னகை புரியும்
ஒற்றை மயிலே வா!
காலைத்தூக்கி வாயில்
கடிக்கும் கட்டழகே வா!
கொள்ளைப்போகுது
எந்தன் நெஞ்சம்
உன்னில் தானேடா!
கொள்ளை அடித்தவனே!
கள்வனே கொஞ்சம் வாயேன்டா!
குழலால் ஊதி
கீதம் இசைத்து
என்னை மயக்குகிறாய்
ஓரக் கண்ணால்
பார்த்து நீயும்
யாரைத்தேடுகிறாய்?
வெண்ணெய் தரவே
கைகள் நீட்டுகிறாய் - நான்
ஊட்டச்சொன்னால் என்
கண்கள் மூடுகிறாய்
ஒன்றும் தராது
ஏப்பம் விடுகிறாய்
உதட்டில் கொஞ்சம்
ஒட்டி இருக்கிறதே!
உறிஞ்சி நானும்
எடுத்துக்கொள்ளட்டுமா?
உன் பிஞ்சுக்கைகளை
வருடிக்கொள்ளட்டுமா?
உள்ளங் கால்களில்
ஓவியம் வரையட்டுமா?
நீ சிரிக்கும்போது
கட்டி அணைக்கட்டுமா?
நீ மழலை பேசுகையில்
நெஞ்சம் பறக்குது
'அம்மா' எனும் போது
உலகம் மறக்குது
தோளில் போட்டு
தட்டிக்கொடுத்திடுவேன்!
தாலால் பாடி
தூங்க செய்திடுவேன்!
கண்ணா உறங்கு
ஆராரோ! என்
கண்ணே உறங்கு ஆரிராரோ!

விடியலை நோக்கி!

(இளம் கைம்பெண்களுக்கு, இக்கவிதை சமர்ப்பணம் )

தும்பை உடுத்திய
வெண் புறாக்களே!

கட்டுப்பாட்டுச்சிறைகளின்
கரம் பிடித்தது போதும்!
நாண சுவா¢ன் பின்னால்
ஒளிந்திருந்தது போதும்!
மொட்டென்று நீ
மொவ்னித்திருந்தது போதும்!

சூ¡¢யனுக்கு பின்னால்
விடியல் இல்லை!
தங்க வளைய(ல்)ங்களால்
வேண்டாம் உனக்கு பூட்டு!
பட்டு சா¢கைகளால்
போர்த்திவைக்க நீ
பொக்கிச பெட்டியல்ல!
அலங்காரம் 'தன்' வெளிப்பாடு!
அகங்காரம் 'தான்' வெளிப்பாடு!
தன்னம்பிக்கையே வீரம்!
புன்னகையே அழகு!
எழுந்து நில்;துணிந்து செல்!
நீ நடக்கும்
முள்பாதையின் ரத்தம்
நாளை சந்ததியினருக்கு
பூக்களாய் மாறட்டும்!!

தெரிந்தும் தெரியாமல்

அழுகிப்போகும் குப்பைகள்
அமில மழை பொழியும்
என தெரிந்தும்
எரிக்காமல் புதைக்காமல்
பக்கத்து காலி மனையில்
உயிருள்ள பிணங்களாய் நாறும்!

கொட்டும் மழை நீர்
அதிரடி பரிசு என தெரிந்தும்
வடிக்காமல் பிடிக்காமல்
சகதிகளாய் ஓடவிட்டு
ரோடு போடா சாலையை ஏசும்!

பாலிதீன் பைகள்
கால் நடைகளின்
மூச்சு வாங்கிகள்
என தெரிந்தும்
அட்டைப்பைகளை
அலட்சியப்படுத்தும்!

மர மறைவு கழிவுகள்
அநாகரிக அசுத்தங்கள் என தெரிந்தும்
கட்டண கழிப்பறைகளை
நிராகரிக்கும்!

இழுத்து விடும் நிகோடின்கள்
அருகாமை பாலகர்களுக்கு
தாமத விசக்காற்றுகள் என தெரிந்தும்
அநாவசிய சுவாசப்பயிற்சிகளாய்
நொடிக்கொருதரம் விடும்!

அருகே இருக்கும் தங்கையை
காவல் செய்தவாறே
எதிரே இருக்கும் நங்கையை
நோட்டம் விடும்!

தெரிந்தும் தெரியாமல்
இந்த இயற்கை உபாதைகள்
இலவசமாய் கழியப்படும்!

முதல் காதல்

முதன் முதலில்
சந்திக்கப்போகிறேன்
அவனை...
என் காதலியை
நாளை மணமுடிக்கப்போகும்
அவனை...
எப்படி இருப்பானோ?
என்னை விட அறிவானவனோ?
என்னை விட அந்தஸ்தானவனோ?
எனக்குத்தெரியும் - அவள்
அழகிற்கு மயங்குபவள் அல்லள்!

எப்படி பேசுவது அவனிடம்?
பொறாமைத் தீயை
வார்த்தைகள் கொப்பளித்துவிடுமோ?
அவமானம் தாங்காமல்
கண்ணீர் குண்டுகளை
கண்கள் பொழிந்துவிடுமோ?
குரல் அடைத்து
நா தழுதழுத்துவிடுமோ?

ஒத்திசைவில்லா மனதால்
ஒத்திகைகள் கூட
ஒத்திப்போடப்பட்டன!

ஆனால் அவனோ
என் வாசலுக்கே
வந்துவிட்டான்
பத்திரிக்கை ஏந்தியவாறு!

யாரோ ஒருவர்
என் பெயரையும்
பணியையும் கூறி
அறிமுகம் செய்துவைக்க
உடனடி புன்னகையை
உதட்டில் ஒட்டவைத்துக்கொண்டேன்..

எப்படியும் அவனிடம்
சொல்லிவிட வேண்டும்..
அவள் தான் என் கனவு தேவதை என்று
அவள் என் உயிராய் இருந்தாள் என்று
அவளை நீ
இரவு பகல் பாராமல்
கண்ணில் மணிபோல் எப்போதும்
காக்கவேண்டும் என்று
காசு பணம் கேட்டு அவளை
களங்கப்படுத்திவிடக்கூடாது என்று

என் உதட்டை பிரிக்கும்முன்
பத்திரிக்கையை கையில் கொடுத்தான்
"இருபத்து நான்கு மணி நேர
இலவச மருத்துவமனை
ஆரம்பிக்கப்போகிறேன்
வந்து விடுங்கள்" என்று

மகிழ்ச்சி பொங்க
எதுவும் பேசாமல்
வாங்கிக் கொண்டேன்

அவன்
எங்கள் ஊரின்
முதல் மருத்துவன்.

உறவாக வந்தவளே!

எங்கிருந்தோ வந்தாய்!
கணினி முன்னே நின்றாய்!
பாலைவன பேரிச்சையின்
நீர் உறிஞ்சிய அடி மணலாய்
வறண்டு போய் நானிருக்க
நட்புக்கரம் நீட்டி
உறவாக வந்தவளே!
நிழலைப் பிடித்து
நிஜமென்று நின்றிருக்க
முதல் நாள் துவக்கத்திலேயே
மனதுக்குள் மலையாக நிற்கின்றாய்!

என் தனிமை வெயிலுக்கு
சாமரம் வீச வந்தவளே!

எதுவும் நிரந்தரமல்ல! - இது
எனக்கு
அனுபவம் தந்த பாடமடி!

நீ எங்கோ?
நான் எங்கோ?

உன்குரல் அனுதினமும்
எனக்காக சிணுங்கும்போது
உணர்ந்தேன் நான் -என்
உறவாக வந்தவள் நீயென்று!

எதிர் வினை

என்னை மிதிப்பதால்
மண்ணை மிதிக்கிறேன்
மிதியடி!

முள்ளும் மலரும்
அனலில் இட்டால்..
மலரும் கூம்பும்
வாடை தொட்டால்..

Saturday, April 02, 2005

வெற்றியின் மகுடம்!

பொய்களைத் தலையில் சூடி உன்
தலைக்கனம் ஏற்றும் மட்டும்
அலங்கார மோகம் உன்
ஆசைகளை மொய்க்கும்மட்டும்
ஆடம்பர நாகரிகம் உன்
ஆர்வத்தை ஆர்ப்பரிக்கும்மட்டும்
குட்டக் குட்டக் குனிந்து நீ
தியாகிப்பட்டம் ஏற்கும் மட்டும்
மட்டந்தட்டி பேசுவோரிடம்
உரிமைப்பிச்சை கேட்கும் மட்டும்
ஊடகங்களில் சதைகளைக் காட்டி
மதிகளை மயக்கும் மட்டும்
பெண்ணே! நீ
அடிமை போதையிலிருந்து
மீள முடியாது!

காவல் துணையோடு
உலா வருவதற்கு
உனக்கு எதற்கு கால்கள்?

பெண்ணே! நீ
கோப்பை அல்ல!
விரசத்தை நிரப்பி
விலை போவதற்கு!

சொர்க்கமே என்றாலும்
சொந்தக்காலில் நின்றிடு!

பள்ளிக்கு செல்லேல்
கள்ளிப்பால் அருந்திடு!

அறிவுக்கண் கொண்டு
ஆழ்ந்துணர்ந்து வென்றிடு!

அன்பால் அகிலத்தை
அரவணைத்துச் சென்றிடு!

ஏன் என்ற கேள்வி தான்
அடிமைத்தனத்திற்கு மருந்து!

உன் காலில் நீ நிற்கும் நன்னாளில்
ஊருக்கு வை விருந்து!

அன்று சாதனைப்புன்னகை
சூட்டட்டும் உனக்கு
வெற்றியின் மகுடம்!

மகுடி ஊதும் பாம்புகள்

"ஆயிரத்தில் ஒருத்தி"

"அழகான புன்னகை"

"சிந்தை கவரும் வெட்கம்"

"செங்காந்தல் விரல்கள்"

"செஞ்சாந்து பாதம்"

"அன்பிற்கு இனியவள்"

"சுட்டு விழி பார்வை"

"இல்லாத இடை"

"இடை தேடும் ஜடை"

"கொடி மலர் தேகம்"

இப்படி.......

காண இயலுபவைகளுக்கு கவர்ச்சியாய்
காணாதவைகளுக்கு கற்பனையாய்

மகுடி ஊதுமடி பெண்ணே!
இவை 'நல்ல' பாம்புகளல்ல!

உன்
சிந்தை மயங்கச்செய்து
விழுங்க காத்திருக்கும்
மலை விழுங்கிகளடி!

" விழிமின்! விழிமின்!! "

விவேகம் மிக்கவரின்
பொன்மொழியடி!

மகுடி கேட்கும்
கேட்கும் பேதையே!
இதையும் கொஞ்சம் கேளடி!
" விழிமின்! விழிமின்!! "