நீட்டித்திருக்கும் உன் தூக்கத்தில்
வண்ணக்கனவுகள் இல்லை
மீள்பார்வைப் பயணங்களில்
பச்சையங்கள் இல்லை
குவித்த சிந்தனைகளில்
சுடரொளிப் பற்றி எரியவில்லை
விரிந்த விலகல்களில்
வானவில் இல்லை
சந்திப்புகளில்
சர்க்கரை இல்லை
பிரிவுகளில்
சயனைடு இல்லை
நீ
காதலிப்பதாகச் சொல்லாதே!
சம்பளத்தின் மீது
சம்மந்தம் செய்வதல்ல
காதல்.
சக்கை உடலுக்குச்
சாறூற்றுவதல்ல
காதல்.
மற்றதற்கு மாற்று
அல்ல காதல்.
காதல்....
நுண்ணிய ரசனைகள்
நுகரும் ரசவாதம்!
ஒளிக்குள்
ஒளிந்திருக்கும்
வெப்பம்போல்
எனக்குள்
உன்னை
உனக்குள்
என்னை
உருக்கி உருக்கி
ஊற்றி சமன் செய்ய முயலும்
ஓட்டைப்பாத்திரம் காதல்
முதலில் பிடிக்கும்
பிறகு குடிக்கும்
கடைசியில் வெடிக்கும்
தொட்டால் விலகும்
விலகினால் துரத்தும்
மூழ்கினால் மிதக்கச் செய்யும்!
அது தான் ஆழம்.
அதுவரை....
நீ
காதலிப்பதாகச் சொல்லாதே!
Friday, August 19, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
intha kavithai kathalin aalathai azhagaha solkirathu...
ungal sinthanai miga arumai.
Post a Comment