Thursday, September 22, 2005

நிழலும் நானும் - ஒரு விளையாட்டு

நான் பிறக்கும்முன்பே
பிறந்துவிட்ட நிழலே...
என் மீது தான்
எத்தனை பிரியம் உனக்கு!
இருக்கும்போதும்
நடக்கும்போதும்
உறங்கும்போதும் கூட
விழிப்புடன்
என்னுடன் நீ....
நீ மட்டும்!
கடுகுக்கும் கடலுக்குமாய்
நமது போட்டி
நான் எழும்முன்பே
நீ நிற்கிறாய்
நான் நிற்கும்போதோ
ஓடுகிறாய்
உன் ஓட்டத்தைப் பிடிக்க
ஓடி ஓடி
நான் களைத்தேன்.
களைத்தபோதும்
உன் நிழலில்
கொஞ்சம் திளைத்தேன்.
ஆனாலும் நீ
அசரும்போது
அசத்திப்பார்ப்பதில்
ஆனந்தம்தான் எனக்கு!
நான் பலமாய் நிற்கையில்
என் காலடியில் நீ!
கர்வம்தான் எனக்கு...
உன்னை ஒரு நாளாவது
என் காலடியில் போட்டு
மிதித்துவிட மாட்டேனா என்று!
நீ
ஓடும் வேகத்தில்
நானும்
அசுரமாய்....
விரைகையில் விரிகிறாய்
விரிகையில் விரைகிறாய்
நீ நினைக்கும்முன்
நான் நிற்க
போட்டி தான் நமக்குள்.
நேற்று நான்.
இன்று நீ.
மாறி மாறி நமக்குள் வெற்றி.
உன்
களைப்பைப்பார்க்கும் வெறி
எனக்குள் எழுந்தபின்
நான் சளைக்கவே இல்லை.
உன் வேகம் கூட
எனக்கு சவால் தான்.
உன் முடக்கம் கூட
எனக்கு வேதனை தான்.
ஏனெனில்
நீ ஓடுவதாலேயே
நானும் ஓடுகிறேன்.
உன்னுடன் ஆடும்
ஆட்டத்தினாலே
எனது வாசலும் நீள்கிறது.

No comments: