நிறம் மாறிய நெஞ்சம்
************************
"என்ன மச்சான்.... இது எத்தனாவது?" சுரேஷ்.
முகத்தை சுழித்தவாறே நவீன் "11ன்னு நினைக்கிறேன் மாம்ஸ். வரியா.... சாயங்காலம் போலாமா...?"
"அடையார்தானே! கிளம்பிட்டு போன் பண்ணு மச்சான்"
"இந்த முறையாவது பொண்ணு நான் நினச்சபடி இருக்கணும்னு வழிவிடு விநாயகர்கிட்டே வேண்டிட்டு வா மாம்ஸ்"
"கவலைப்படாதடா.... எல்லாம் நீ நினச்சபடியே அமையும்"
...........
அன்றிரவு, ஸ்கூட்டரில் இருவரும் திரும்பி வரும் போது..."ஏண்டா... பொண்ண பிடிக்கலைன்னு சொன்னே..? நல்ல குடும்பம். ஒரே பொண்ணு. பார்க்க லட்சணமா அடக்கமா இருக்கு. கை நிறைய சம்பளம். வேற என்னடா வேணும்?"
"இல்ல மாம்ஸ். நானும் சுமாரான நிறம்; பொண்ணும் அப்படியே இருந்தா குழந்தையும் அதே நிறமாத்தான் பொறக்கும். சுண்டினா சிவக்கிற குங்குமப்பூ மாதிரி... இருக்கணும் மாம்ஸ்.. ப்ச்.. போட்டோவப் பார்த்து ஏமாந்துட்டேன்!"
"அடப்பாவி! நான் உங்க அக்காவ கட்டிக்கிடலயா...? உன் மருமவன் சிவப்பா பிறக்கலையா..? என்னடா நீ!"
"நீ அந்தக்காலம். எங்க அக்காவ பிடிச்சிப்போய் கட்டிக்கிட்டே; நான் என் பிரண்ட்ஸ்கிட்டே நாளைக்கு இதுதான் என் ஒய்ஃப்னு காட்டிக்கும்போது ஒரு தமன்னா, ஷ்ரேயா மாதிரி இல்லாட்டாலும் என் ரேஞ்சுக்காவது இருக்கணுமில்ல...! எஞ்சீனியர் மாப்பிள்ளைன்னா சும்மாவா...?"
...........
"எதுக்கு மாப்ள அவசரமா ஹாஸ்பிடல் வர சொன்னே?"
"விரல் நுனிகளில் லேசான அரிப்பு இருக்கு மாம்ஸ்... நிறம் பாரு மாறி இருக்கு. அதான் டாக்டர்கிட்டே காட்டிட்டு போலாம்னு... டோக்கன் நம்பர்.5. அடுத்து நாமதான்"
............
"என்னா டாக்டர்.. ஏன் என் மாப்பிள்ளைக்கு இப்படி இருக்கு?" சுரேஷ்.
"பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்ல மிஸ்டர். நவீன். இது சோரியாஸிஸில் ஒரு வகை. பரம்பரையா இது வரலாம். அதாவது உங்க தாத்தா, பாட்டிக்கு இது போல் இருந்ததுன்னா உங்களுக்கு வரலாம். உங்களுக்கு இருக்கிறதால உங்க குழந்தைக்கு வர வாய்ப்பிருக்கு, இதனால மற்றவங்களுக்கு எந்த பாதிப்பும் இல்ல. அதனால பயப்பட வேண்டாம். பட், உங்களுக்கு ஒயிட் ஸ்கின் அப்படியே ஸ்ப்ரெட் ஆகும். நிறம் மாறும். அந்த இடத்தில் ஒயிட் ஹேர்ஸும் வரலாம். நான் செக் பண்ணிட்டேன்; உங்க தலையில அப்படி எதுவும் ஒயிட் ஹேர்ஸ் இல்லை. நம்ம தோலில் இருக்கிற மெலானின் குறைவுதான் இதற்கு காரணம். கருப்பா இருக்கிறவங்களுக்கு 'மெலானின்' அளவு கூடுதலா இருக்கும். கடவுள் அதனாலதான் இயற்கையாவே நம்மள அப்படி படைச்சிருக்கார். ஃபேஸ் கிரீம், வேற சோப் எதுவும் போடாதீங்க. டெய்லி இந்த லோஷனை தடவிட்டு சன்பாத் எடுங்க. திருப்பி நெக்ஸ்ட் வீக் வந்து பாருங்க."
...........
"என்ன மாப்ள... ஸ்கின் சரியாகிடுச்சு போல. இப்ப சந்தோசம்தானே!"
"ஆமாம் மாம்ஸ். நாளைக்கு நாம 'நிச்சயம்' பண்ண போலாமா?"
"அட! பொண்ணு யாரு?"
"அதே பொண்ணுதான். போன மாசம் பார்த்தோமே!"
"அப்பாடா..... எனக்கு நிம்மதிடா. இனி உன் கூட வீடு வீடா அலைய வேண்டியதில்ல... இப்பவே உங்க அக்காகிட்ட சொல்லிடுறேன்"
--------------------------------------------------------------------
Tuesday, June 02, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment